tஅமைச்சர் மகேஷுக்கு மாணவிகள் எழுதிய கடிதம்!

Published On:

| By admin

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5-ஆம் தேதி முதல் மே 28 தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுப் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகாலமாக கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2021 செப்டம்பர் மாத காலகட்டத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஆனால் அதைத் தொடர்ந்தும் பருவமழை காலம் உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்னும் முழுமையாகப் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை.

இந்த சூழலில் முடிக்கப்பட்ட பாடத்திட்டங்களிலிருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டமாகத் திருப்புதல் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மூன்றாம் கட்ட திருப்புதல் தேர்வு நேற்று தொடங்கியது. ஆனால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால் மீண்டும் 18ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.
ஏப்ரல் 23 ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். அதன்பிறகு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு மே 5ஆம் தேதி எழுத்துத் தேர்வு தொடங்குகிறது.

இந்த சூழலில் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தும் வகையில் சேலம் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மகளிர் பள்ளி மாணவிகள் 80 பேரும், வீரபாண்டி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் நேற்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர்.

இந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள் என்ற தகவலை அறிந்து சேலம் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி , கல்வி அதிகாரிகளுடன் அங்குச் சென்றார்.

பின்னர் அந்த மாணவ மாணவிகளைச் சேலம் அரசு மகளிர் மாதிரி பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பொதுத்தேர்வு நெருங்கியுள்ள நிலையில் இன்னும் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாததால் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து வந்திருந்த அனைத்து மாணவர்களிடமும் கோரிக்கை மனு எழுதி வாங்கப்பட்டது. சேலம் மாதிரி அரசு மகளிர் பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவர்களைத் தேர்வு எழுதுவது போல் அமரவைத்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை எழுதி வாங்கினர்.


அந்த மனுவில், “மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, அரசுப் பள்ளி மாணவர்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அனைத்து மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய வகுப்புகள் எங்களுக்குச் செப்டம்பர் மாதம் தான் தொடங்கியது. கொரோனா காரணத்தால் 11ஆம் வகுப்பில் கல்வி கற்க இயலவில்லை. அதனால் 12ஆம் வகுப்பு முதல் இரண்டு மாதத்திற்குப் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. நவம்பர் மாதம் முதல் 12 ஆம் வகுப்பு பாடத்தட்டங்கள் தொடங்கியது. மழை காரணமாக சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

முதல் திருப்புதல் தேர்விற்கான கால அட்டவணை ஜனவரி 19ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 14ஆம் தேதி முதல் அந்த மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 9ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கப்பட்டு 16ஆம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களிலேயே இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. குறுகிய காலத்தில் ஆசிரியர்கள் முழு பாடத்தையும் நடத்தி முடித்தாலும் எங்களால் படிக்க மிகவும் சிரமமாக இருக்கும்.

மே மாதம் 10 மற்றும் 12 வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடைபெற இருக்கின்றது. ஆனால் பாடங்கள் இன்னும் நடத்தி முடிக்கவில்லை. இதனால் பொதுத்தேர்வை ஒத்திவைக்குமாறு அல்லது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு உரிய பாடங்களை மட்டும் பொதுத் தேர்வு பாடங்களாக அறிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், ” ‘அக்டோபர் மாதத்தில் பிளஸ் டூ பாடத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணத்தால் வால்யும் 1 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. வால்யும் 2 முடிக்கப்படவில்லை. எனவே பாடத்திட்டத்தை முடிக்காத காரணத்தால் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியுமா என்று ஒரு ஐயம் எழுந்துள்ளது. அதனால் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்களைக் குறைத்துத் தரவேண்டும் தேர்வு தேதியை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று மாணவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் தனித்தனியாக மனு வாங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அரசு எடுக்கும் முடிவை நடைமுறைப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு நெருங்கியுள்ள சமயத்தில் இந்த கோரிக்கையை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். சேலம் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தமிழக முழுவதும் பொதுத் தேர்வைச் சந்திக்க இருக்கும் மாணவர்களின் மன நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share