ஆணுக்கு இரண்டரை ஆண்டுகளும், பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகளும் ஆட்சியை வழங்க வேண்டுமென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் அந்தப் பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தட்டிக்கேட்கும் நீதிமன்றமாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அடுத்து பன்னீர்செல்வம் பேசியதுதான் ஹாட் டாப்பிக்காக மாறியது. “ஒரு ஆட்சியின் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகள் ஆணுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் பெண்களுக்கும் வழங்கினால்தான் ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலை அனைத்து மட்டங்களிலும் உருவாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து நிற்க அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
1991ஆம் ஆண்டு முதல் முதல்வர் பொறுப்பில் இருந்துவந்தவர் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா. தான் சிறை செல்ல நேர்ந்தபோது பன்னீர்செல்வத்தைத்தான் அவர் முதல்வராக்கிவிட்டுச் சென்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுடனான மோதலால் தனி அணியை ஏற்படுத்தினார். பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
சமீபத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் மோதல் உண்டாக அதனை அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தலையிட்டுச் சமாதானப்படுத்தி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தனர். தற்போது சசிகலா ஜனவரி மாதத்தில் விடுதலையாவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால், அவரை மனதில் வைத்து பெண்ணுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பன்னீர்செல்வம் சொன்னாரா என்ற கேள்விகள் அதிமுகவினர் மத்தியிலேயே எழுந்துள்ளது.
எனினும் பெண்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்குச் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் பன்னீர்செல்வம் பேசியதாகக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஏற்கனவே ரஜினியுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறிய நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என்று முதல்வர் எடப்பாடியே மறுத்துவிட்டார். இப்போது அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தாலும், இரண்டரை ஆண்டுதான் எடப்பாடிக்கு ஆட்சி என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பன்னீர். இதனால் அதிமுகவில் அதிர்வலைகள் எழ ஆரம்பித்துள்ளன.
**எழில்**�,