திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி சில கல்லூரி மாணவிகளை சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பெப்பர் ஸ்ப்ரே வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ’தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ எனச் செய்தியாளர்கள் சந்திப்புதோறும் கூறி வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில் சென்னையிலுள்ள தனது இல்லத்துக்கு அஇஅதிமுக சார்பில் பல்வேறு கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களை அழைத்து, ஆபத்து காலங்களில் கயவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அங்கு வந்த மாணவிகள் பேருந்துகளில் செல்லும்போதுகூட பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கூறினர். இதையடுத்து அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகம் மாறி வரும் நிலை உருவாகியுள்ளது, பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்படுகிறது. ஆபத்து காலங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிமுக முடிந்த அளவுக்கு பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்” என்று கூறினார்.
**-பிரியா**