fசசிகலா: மீண்டும் மோதும் ஓபிஎஸ்- இபிஎஸ்

Published On:

| By admin

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமாக தேனி மாவட்டம் கைலாசபட்டியில் பண்ணை வீடு இருக்கிறது. இந்தப் பண்ணை வீட்டிலே நேற்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஒன்றுகூடி, “தொடர் தோல்விகளை தவிர்க்க அதிமுக ஒன்றிணைய வேண்டும். சசிகலா, தினகரன் ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும்” என்று பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினர். இதை தீர்மானமாக நிறைவேற்றி ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்திருப்பதாகவும் தேனி அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் நேற்று இரவு பேட்டியளித்தார்.

இதையடுத்து அதிமுகவில் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்ட நிலையில், தேனி மாவட்டத்திலிருக்கும் பன்னீர்செல்வத்தை சந்திக்க தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான உதயகுமார் இன்று காலையே பன்னீர்செல்வத்தை சந்திக்க புறப்பட்டார். கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி, “அதிமுகவை சசிகலா வழி நடத்த வேண்டும்”என்று பேட்டியளித்துள்ளார்.

பன்னீர்செல்வத்தின் அனுமதியோடு, ஆசியோடு அவரது வீட்டிலேயே நடந்த இந்த கூட்டம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையான கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

எடப்பாடியின் உறவினர்களால் நடத்தப்படும் ஃபேஸ்புக் பக்கத்தில்,”மக்கள் நலனுக்காக தலைவர்கள் சமரசம் செய்து கொள்வதுண்டு. தலைமைத்துவத்தில் சமரசம் இல்லை” என எடப்பாடியின் படத்தை வெளியிட்டு இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றி உள்ளனர்.

இரட்டை தலைமைக்கு ஏற்றுக் கொண்டு தான் அண்மையில் அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த சூழலில் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிறகு பன்னீர்செல்வம் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூறிய அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில்தான் தேனி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கூடி முதல்கட்டமாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

ஒருபக்கம் பன்னீர்செல்வத்தை சந்திக்கவும் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவும் அதிமுக நிர்வாகிகள் பயணப்பட்டு வருவதால் அதிமுகவில் மீண்டும் ஒரு குழப்பம் உருவாகத் தொடங்கியுள்ளது.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share