கொடநாடு கொலை வழக்கு: ஆளுநரை சந்தித்த எடப்பாடி- பன்னீர்

politics

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று (ஆகஸ்டு 19) ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தனர்.

திமுக ஆட்சி அமைத்து நூறு நாட்கள் ஆன நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இதை விட ஒருபடி மேலே போய், கொடநாட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காவலாளியை தாக்கிக் கொன்றுவிட்டு பல ஆவணங்கள் கொள்ளை போயின. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

10 பேர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான சயன் ஜாமீனில் இருக்கிறார். அவரிடம் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்ததாக தெரிவித்தார் என்று தகவல்கள் வந்தன. எடப்பாடி மட்டுமல்ல ஓ,பன்னீர் செல்வம், வேலுமணி உள்ளிட்ட ஐந்து முக்கிய அதிமுக தலைகள் இவ்வழக்கில் சிக்கப் போவதாகவும் செய்திகள் வந்தன.

இதைக் கண்டித்து நேற்றும் இன்றும் தமிழக சட்டமன்றத்தை அதிமுக புறக்கணித்தது. நேற்று சட்டமன்ற வாசலில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் அவசரமாக இன்று ஆளுநரை அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சந்தித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து திமுக அரசு அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புகார் அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,

“தற்போது திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து, ஆளுங்கட்சியினர் தங்கள் பாக்கெட்டை நிரப்புவதிலேயே குறியாக உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாக தோல்வி அடைந்த அரசு, தனது தோல்வியை மறைக்க எதிர்க்கட்சியான எங்கள் மீது தொடர்ந்து வழக்குகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் குறிக்கோளே ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவைதான். தேர்தல் அறிக்கைக்கும் கொடநாடு வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதை விரைவில் முடிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் விரைந்து விசாரணை நடைபெற்று வழக்கு முடியும் தருவாயில் மீண்டும் அரசியல் பழிவாங்கும் வகையில் அதை விசாரிக்கிறார்கள். அந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் என்.ஆர். இளங்கோ வாதாடி வருகிறார்”என்று குற்றம் சாட்டினார்.

கொடநாடு கொலை வழக்கு மறுவிசாரணை எடப்பாடி எதிர்பார்த்ததை விட மிக வேகமாக நடப்பதால்தான் அவர் அவசரமாக ஆளுநரின் உதவியை நாடியிருப்பதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.