எடப்பாடியைக் கண்கலங்க வைத்த ஓபிஎஸ்ஸின் தாயார்!

Published On:

| By Balaji

தமிழக துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அவர் போட்டியிடும் போடி தொகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 27ஆம் தேதி பிரச்சாரம் செய்தார்.

“போடி தொகுதிக்கு மட்டுமல்ல தேனி மாவட்டத்துக்கே அண்ணன் ஓபிஎஸ் ஏராளமான நலத்திட்டங்களை இன்று நேற்றல்ல கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செய்துகொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்தைப் போல தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இவ்வளவு திட்டங்கள் கிடையாது. உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடைதான் அண்ணன் ஓபிஎஸ்” என்று பேசி ஓபிஎஸ்ஸின் ஒவ்வொரு சாதனையாக எடப்பாடி பட்டியல் போட அருகே நின்று பிரமிப்பாக கவனித்தார் ஓபிஎஸ்.

பிரச்சாரம் முடிந்து போடி சுப்புராஜ் நகரில் இருக்கும் தன் இல்லத்துக்கு இரவு சுமார் 9 மணியளவில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து வந்து உபசரித்தார் ஓபிஎஸ்.

துணை முதல்வரின் மூத்தமகன் ஓபிஆர், இளைய மகன் பிரதீப் ஆகியோரது மனைவி மக்கள் பேரன் பேத்திகள் என குடும்பத்துடன் எடப்பாடியை வரவேற்றனர். அந்த இரவு வேளையிலும் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்க வேண்டுமென்பதற்காக இன்னொருவரும் அந்த வீட்டில் காத்திருந்தார். அவர்தான் ஓபிஎஸ்ஸின் தாயார் ஓ.பழனியம்மாள்.

எடப்பாடியை தன் அம்மாவிடம் அழைத்துச்சென்ற ஓபிஎஸ், ‘அம்மா….யாரு வந்திருக்காங்கனு பாருங்க. முதலமைச்சர் அண்ணன் வந்திருக்காரு’ என்றதும் பழனியம்மாளின் அருகே சென்று அவரைப் பிடித்துக் கொண்டார் முதல்வர்.

’நல்லா இருங்கப்பா…’ என்று இருவரையும் மெல்லிய குரலில் வாழ்த்திய ஓ.பழனியம்மாள் தன் குல வழக்கப்படி விபூதி டப்பாவை எடுத்துவரச் சொன்னார். எடப்பாடி பழனிசாமியின் நெற்றியில் விபூதியை இட்டு ஆசீர்வதித்தார். பின் தன் மகன் ஓ.பன்னீர் நெற்றியிலும் விபூதி பூசி ஆசீர்வதித்தார்.

தன் சொந்தத் தாயை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வீட்டில் அவரது தாயாரின் காலில் விழுந்து ஆசி வழங்கி விபூதி பெற்றபோது அவரது கண்கள் கலங்கிவிட்டன. அதுமட்டுமல்ல… பெரியப்பா, பெரியப்பா என்று ஓபிஆர், பிரதீப் ஆகியோர் அழைக்க பேரக் குழந்தைகள் எல்லாம் தாத்தா, தாத்தா என்று கூப்பிட ஏதோ தன் வீட்டுக்கு வந்ததைப் போலவே உணர்ந்துவிட்டார் முதல்வர்.

ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெடிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் வீட்டில் எடப்பாடிக்குக் கிடைத்த சென்டிமென்ட் வரவேற்பும் அனுபவமும் இவருக்கும் இடையிலான உறவை இன்னும் வலிமையாக்கியிருக்கின்றன என்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுகவினர்.

**-ராகவேந்திரா ஆரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share