ஹிஜாபுக்கு மறுப்பு – ஒரு சமூகத்தை அவமானப்படுத்தும் செயல்: ஒவைசி

politics

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஒரு சமூகத்தை அவமானப்படுத்தும் செயலாகும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில்தான் ஹிஜாப் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்த விவகாரம் பரவியது. ஹிஜாப் – காவி சால்வை போராட்டம் வன்முறையாக மாற தொடங்கியதையடுத்து, கடந்த 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், பள்ளிகளைத் திறக்கலாம்… ஆனால், மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிட்டது.

இதையடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றி, பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, ஒரு வார விடுமுறைக்குப் பின்னர், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள ரோட்டரி பள்ளியின் வாசலில் ஆசிரியை ஒருவர் நின்றுகொண்டு மாணவர்கள் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்தனர். அப்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை நிறுத்திய ஆசிரியை ஹிஜாப்பைக் கழற்றினால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என்று கூறினார். சிறிது நேரம் யோசித்த மாணவி, வேறு வழியின்றி ஹிஜாப்பைக் கழற்றி விட்டார். அதற்குள்ளாக ஹிஜாப் அணிந்து வந்த மற்றொரு மாணவியுடன், பெற்றோரும் சேர்ந்து வந்து, ஹிஜாப்புடன் பள்ளிக்குள் செல்ல அனுமதியுங்கள், வகுப்பறைக்குள் சென்றவுடன், அதைக் கழற்றி விடுவார்கள் என்று ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஹிஜாப்பைக் கழற்றினால் மட்டுமே உள்ள அனுமதி என்று அந்த ஆசிரியை திட்டவட்டமாகக் கூறினார். வேறு வழியில்லை என்பதை உணர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை ஹிஜாப்பைக் கழற்றிவிட்டு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இரண்டு நிமிட வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “இது ஒரு சமூகத்தை அவமானப்படுத்தும் செயல். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் இதுதான் நடக்கும். எங்கே என் கண்ணியம்?. அதிகாரம் நிரந்தரம் அல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த நிலையில் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காததால், தேர்வு எழுத மறுப்பு தெரிவித்து மாணவிகள் வீடு திரும்பினர். சில இடங்களில் மாணவிகள் ஹிஜாப்பைக் கழற்றிவிட்டு வகுப்பறைக்குள் சென்ற நிலையில், சிலர் ஹிஜாப்பைக் கழற்ற மறுத்து வீடு திரும்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.