தமிழ் உட்பட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் பொறியியல் பாடங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகப் பள்ளிப்படிப்பைத் தாய்மொழியில் படித்த மாணவர்கள் மேல் படிப்பின் போது சிரமங்களைச் சந்திக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் பொறியியல் மருத்துவம் போன்ற படிப்புகள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழியிலேயே பாடங்கள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவிலும் 8 மாநில மொழிகளில் பொறியியல் பாடங்களைக் கற்பிக்க அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி குழுமம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
கிராமப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இன்றுவரை மாநில மொழிகளில் படித்த பல மாணவர்கள், ஆங்கிலத்தில் மேற்படிப்பை கற்க வேண்டும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற பட்டப் படிப்புகளில் சேர தயக்கம் காட்டி வந்த நிலையில் இந்த முடிவு அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் கல்வியாண்டு முதல், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு இந்த புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ சேர்மன் அணில் சகாஸ் டிராபுத்தே கூறுகையில், பொறியியல் பாடத்தை, மாணவர்கள் தங்களது தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் ஆகும். இதன்மூலம் பாடத்திட்டத்தின் அடிப்படையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். மாநில மொழிகளில் பாடத்தை நடத்துவது தொடர்பாக எங்களுக்கு 500 கோரிக்கைகள் வந்தன. எதிர்காலத்தில் 11 மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,”