பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வந்தனர். கல்லூரிகளில் சேர எப்போது விண்ணப்பிக்கலாம், கலந்தாய்வு, மாணவர்கள் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
**பொறியியல்**
இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நேற்று (ஜூலை 25) வெளியிட்டது.
ஜூலை 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 24 விண்ணப்பிக்கக் கடைசித் தேதி
ஆகஸ்ட் 25 ரேண்டம் எண் வெளியிடப்படும்
செப்டம்பர் 4 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்
செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்
அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும்
அக்டோபர்.18 முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை எஸ்சிஏ., எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ஆம் கல்வியாண்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் பிஇ., பிடெக். படிப்புகளில் மொத்தமுள்ள 1,63,154 இடங்களில், 71,195 இடங்கள் மட்டுமே நிரம்பின. 20 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை. 61 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**கலை மற்றும் அறிவியல்**
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தில் பதிவு செய்யலாம். http://tngasa.com/ என்ற இணையதள வாயிலாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.
**-பிரியா**
�,