திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியுமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழா ஜூலை 11 ஆம் தேதி வருகிறது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,
“நூறாண்டு கண்ட திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்து, தமிழகத்தின் ஊர்தோறும் தமிழ் மணம் பரப்பி, கொள்கைப் பற்றுடன் குன்றென உயர்ந்து நின்றவர் என்றென்றும் நம் மதிப்பிற்குரிய நாவலர் அவர்கள். கழகம் நடத்திய மும்முனைப் போராட்டம், விலைவாசி உயர்வுப் போராட்டம், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தன் பங்களிப்பைச் செலுத்திய நாவலர் அவர்கள், 1967-ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடம் வகித்தவர்.பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழக அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக, தலைவர் பதவிக்கு ஒருமனதாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டபிறகு, கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாம் இடமும் வகித்த நாவலரின் எண்ண உணர்வுகள் குறித்து தலைவர் கலைஞர் தன் வாழ்க்கை வரலாறான நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருப்பதுடன், பல நிகழ்வுகளிலும் அதனைப் பதிவு செய்திருக்கிறார்.
நாவலர் அவர்களின் நூற்றாண்டினை ஒட்டி, கடந்த 2019 ஜூலை 11 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழகப் பொருளாளருமான அண்ணன் துரைமுருகன் அவர்கள், ’நடமாடும் பல்கலைக்கழகம் எனப் போற்றப்படுபவரும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறுபடாதவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு அவருக்குச் சிறப்புச் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். திராவிட இயக்கத்தின் தூணான நெடுஞ்செழியனுக்கு அரசின் சார்பில் விழா எடுக்கப்படும். அவரின் பெயர் வரலாற்றில் இடம்பெறும் வகையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்’ எனத் தெரிவித்தார்.ஆளும் அரசின் துணை முதல்வரால் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட உறுதிமொழியினை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்திருந்தோம். ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், நாவலர் நூற்றாண்டு விழா குறித்து தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது வேதனை அளிக்கிறது.
அதனால், நாவலரை என்றும் மறவாத தி.மு.கழகத்தின் சார்பில் அவரது ‘நூற்றாண்டு நிறைவு விழா’ 11-7-2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், அறிவாலயத்தில் நாவலர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, மரியாதை செலுத்திப் போற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும்.வாழ்நாளெல்லாம் பகுத்தறிவு முழக்கம் செய்து, தந்தை பெரியாரின் கருத்துகளை எந்த மேடையிலும் வலுவாக எடுத்துரைத்து, பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை எடுத்துக்கூறி, தன் வாழ்வின் இறுதிவரை சுயமரியாதை உணர்வினைத் தமிழர்களுக்கு ஊட்டிய நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், சீரோடும் – சிறப்போடும், எழிலோடும் ஏற்றத்தோடும், மகிழ்வோடும் – நிறைவோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொண்டாடி, நாவலர் அவர்களின் புகழினைப் போற்றுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை மாநகரின் முன்னாள் பொறுப்பு மேயரும். ரஜினிக்கு நெருக்கமான நண்பருமான கராத்தே தியாகராஜன் இது தொடர்பாகவும் ஸ்டாலினை சீண்டியிருக்கிறார்.
அவர் இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவை வருகிற ஜூலை 11 அன்று திமுக சார்பில் கொண்டாடப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
நாவலரின் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடுவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு மறந்துபோன சில நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
12.01.2000 அன்று நாவலர் நெடுஞ்செழியன் மறைந்துபோனார். அப்போது முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, முதல்வராக இருந்த கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார். மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை அண்ணா அவர்களுக்கு பக்கத்தில் அடக்கம் செய்ய இடம் கேட்டு அந்தக் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார். அன்றைய நாடாளுமன்ற அதிமுக தலைவர் பி.ஹெச். பாண்டியன், அப்போதைய முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ரகுபதி ஆகியோர் அன்றைய தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமியை நேரில் சந்தித்து அந்தக் கடிதத்தைத் தந்தார்கள். ஆனால் அன்றைய திமுக அரசு அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. பிறகு பெசன்ட் நகர் மயானத்தில் நாவலர் உடல் தகனம் செய்யப்பட்டது.
நாவலர் மறைந்து ஒரு வாரம் சென்ற பிறகு 20-01-2000 அன்று நடந்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நாவலர் நெடுஞ்செழியன், முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற அன்றைய மேயர் ஸ்டாலின் அலுவலகத்தில் நான் காங்கிரஸ் சார்பாக மனு கொடுத்தேன். 20 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பிரபல தொழிலதிபர் எம்.ஏ. சிதம்பரம், திமுக மன்ற உறுப்பினர் தாமோதரன் ஆகிய இருவருக்கு மட்டும் இரங்கல் தெரிவித்துவிட்டு கூட்டத்தை ஸ்டாலின் ஒத்தி வைத்தார். காரணம் கேட்டேன், மரபு இல்லை என்று சொல்லிவிட்டார் மேயர் ஸ்டாலின்.
இப்படி நாவலரை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவு அவமானப்படுத்திவிட்டு, இன்று அவரது படத்தை அறிவாலயத்தில் திறந்து வைப்பதாக அதிமுக அரசை குறை கூறி ஸ்டாலின் அரசியல் செய்கிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தன் அறிக்கையில் ஸ்டாலினை சாடியுள்ளார் கராத்தே தியாகராஜன்.
**-வேந்தன்**�,”