jவீட்டில் இருந்ததற்கு அபராதமா? ஸ்டாலின்

Published On:

| By Balaji

ஷாக் அடிக்கும் வகையில் மின்சாரக் கட்டணம் இருப்பதாக ஸ்டாலின் சாடியுள்ளார்.

பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான மின் கட்டணத்தை மின்சார ஊழியர்கள் மொத்தமாக கணக்கிட்டனர் என்றும், இதனால் வழக்கமாக வரும் கட்டணத்தை விட கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இரண்டு மாதங்களாக பிரித்து மின்சார பயன்பாட்டை கணக்கிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மின் கட்டண ரீடிங் குளறுபடிகளை கண்டித்தும், கட்டணத்தை எளிய மாத தவணைகளில் கட்ட அனுமதிக்கக்கோரியும் வரும் 21ஆம் தேதி வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மின் கட்டணம் தொடர்பாக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன்று (ஜூலை 19) வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.

அவர் பேசும்போது, “ஒருபக்கம் கொரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. இன்றைக்கு நாடு எந்த நிலைமையில் இருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை; உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும்தான் தெரியவில்லை” என்று அரசை சாடினார்.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மூன்று மாதமாகச் சொல்வதாகவும், அதனை மக்களுக்குத் தரவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், “இந்தச் சலுகை எல்லாம் தராத முதலமைச்சர் மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்வதில் மட்டும் மும்முரமாக இருக்கிறார். மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30ஆம் தேதிவரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைவரும்தான் வாழ்வியல் இழந்து தவித்து வருகின்றனர். ஜூலை 30ஆம் தேதிக்கு மேல் மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ரீடிங் எடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன எனக் கூறி சிலருடைய மின்கட்டண அட்டைகளை காட்டிய ஸ்டாலின், “எவ்வளவு அநியாயமாக கட்டணங்கள் உயர்ந்து இருக்கிறது பார்த்தீர்களா? ஏன் இவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்று கேட்டால், ‘நீங்கள் எல்லோரும் வீட்டில் இருக்கிறீர்கள். அதனால் மின்சாரம் அதிகமாக செலவு ஆகியிருக்கிறது’ என்று அரசு சொல்கிறது.

வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது? வீட்டில் இருந்தது தவறா? மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும். இது மக்களுக்கும் தெரியும்.ஆனால், இப்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் வந்திருக்கின்ற கட்டணம் அநியாயத்திற்கு அதிகமாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறினார்.

“இரண்டு மாதத்துக்குச் சேர்த்து எடுக்கும்போது ஸ்லாப் மாறும். ஸ்லாப் மாறினால் கட்டணமும் எகிறும்.இது மின்சார வாரியத்துக்கு லாபமாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எவ்வளவு பெரிய பளு என்பது சாதாரண மக்களைக் கேட்டால் தான் தெரியும். கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் .கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசால் ஏன் முடியவில்லை? பணம் இல்லையா? நிதி நிலைமை சரியில்லையா? கஜானா காலியாக இருக்கிறதா? எது உண்மை? நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்றால், மக்களுக்குச் சலுகை தருவதற்கு மனமில்லையா?” என்று பல கேள்விகளை முன்வைத்த ஸ்டாலின்,

இதுவரை நாங்கள் சொன்ன மக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த ஆலோசனைகளையும் கேட்கவில்லை.ஏனென்றால், மக்களைக் காப்பாற்றும் உண்மையான எண்ணம் இல்லை. கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் சுயநலம் மட்டும்தான் இன்றைய முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கிறது.

இந்த மக்களின் குரலைக் கோட்டைக்குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம். நான்கைந்து பேர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசங்களுடன் முழக்கங்களை எழுப்புவோம் என்று திமுகவினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share