65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய அரசு ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகியவற்றை கொண்டுவந்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80 லிருந்து 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தபால் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கலந்தாலோசனை எதுவும் செய்யாமல் இத்தகைய மாற்றங்களை ஒருதலைப்பட்சமாக அமல்படுத்துவதை தொடரக் கூடாது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் மூலம் தபால் ஓட்டு போடுவதற்காக வயதை 65 என்று பொய்யாக கூறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும், தேர்தல் நேரத்தில் நிறைய முறைகேடுகளையும் உருவாக்கும் என தமிழகத்திலிருந்து ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வரவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல், பிற இடைத் தேர்தல்களில் 65 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கலாம் என்ற முடிவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. தபால் வாக்குச் சீட்டு உள்ளிட்ட தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள சவால்கள், பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13.03 லட்சம் அல்லது 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்களிக்க மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
**எழில்**�,