தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது தொடர்பாக விளக்கமளிக்க, ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பிட்டு ஆ.ராசா பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் கருத்துகளுக்காக அவர் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்தது.
இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறுகையில், “முதல்வர் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு பற்றி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் அறிக்கை அனுப்பியுள்ளோம். மாவட்டத் தேர்தல் அதிகாரி, எஸ்.பி தந்த தகவலின் அடிப்படையில் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
நேற்று தாராபுரம் வந்த பிரதமர் மோடி, திமுக – காங்கிரஸ் கட்சியினர் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆ.ராசாவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவான, அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும், கீழப்பளூர் மற்றும் மீன்சுருட்டியில் பேசிய பேச்சுகள் குறித்தும் உங்கள் தரப்பு விளக்கத்தை இன்று மாலைக்குள் அளிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஆ.ராசா தனது பேச்சு குறித்து இரண்டு முறை விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**
�,”