சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பு ஏற்கும்வரை பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி பதவி வகிப்பார் என்று ஒன்றிய சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யும் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், நேற்று காலை திடீரென்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, பிரிவு உபச்சார விழாவைத் தவிர்த்து விட்டு தனது குடும்பத்துடன் சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு சென்றார். பின்னர், யாரிடமும் சொல்லாமல் சென்றதற்கு மன்னிப்பு கேட்டு தன்னுடைய சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர், நீதிமன்றப் பணியாளர்கள் என ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஒவ்வொரு உயர் நீதிமன்றத்துக்கும் தலைமை நீதிபதிதான் முழுமையான பொறுப்பு. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தலைமை நீதிபதி எப்போது பதவியேற்பார் என்பதும் தெரியவில்லை. இதற்கிடையில் முக்கியமான வழக்குகள் மற்றும் அவசர வழக்கை விசாரிக்க வேண்டிய சூழல் உள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான துரைசாமிக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சட்டத் துறை அமைச்சகம் நேற்று (நவம்பர் 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசனை செய்து ஆர்ட்டிக்கள் 223இன் படி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மூத்த நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மாற்றலாகி வரும் வரை, இவர் தலைமை நீதிபதியின் பணிகளைக் கவனித்துகொள்வார். நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக 17ஆம் தேதியிலிருந்து பொறுப்பு வகிப்பார். நீதிபதி பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தவுடன், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு பிறகு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நீதிபதியாக இருப்பவர் துரைசாமி. அதனால்தான், அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1960 செப்டம்பர் 22இல் பிறந்த நீதிபதி துரைசாமி, சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பைத் தொடர்வதற்கு முன்பு வணிகவியல் பட்டம் பெற்றார். 1987இல் வழக்கறிஞராகப் பதிவு செய்து, முன்னாள் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தியின் கீழ் ஜூனியராகப் பணியாற்றினார். 1997இல் மத்திய அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2009 மார்ச் 31 அன்று உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,