ஜார்க்கண்டில் ஐந்து கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில் இன்று அதிகாலை தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி காங்கிரஸ் 16, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, ஆர்ஜேடி 1, பாஜக 25, சுயேச்சை 2, ஏஜெஎஸ்யு 2, தேசியவாத காங்கிரஸ் 1, சிபிஐ(எம்) 1 ஆகிய இடங்களில் வென்றுள்ளன. ஆட்சியமைக்கப் பெரும்பான்மை 41 என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகவுள்ளார்.
**பாஜக தோல்விக்குக் காரணம்**
குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆா்சி ஆகிய பிரச்சினைகளே ஜாா்க்கண்ட் தேர்தலில் எதிரொலித்துள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதை மறுத்துள்ள பாஜக, தோல்விக்கான காரணம் குறித்து ஆராய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2014இல் வெற்றிக்குப் பிறகு பாஜக பழங்குடியினர் அல்லாத ஒருவரை (ரகுபர் தாஸ்) முதல்வராக்கியதால், ஜார்க்கண்ட் மக்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், இதுவும் தோல்விக்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
**மோடி, அமித் ஷா வாழ்த்து**
ஜார்க்கண்டில் வெற்றி பெற்று முதல்வராக உள்ள ஹேமந்த் சோரனுக்குப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மக்களின் தீர்ப்பை வரவேற்பதாகவும், ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து செயல்படும் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோரும் ஹேமந்த் சோரனுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
**24 ஆண்டுகளில் முதல் தோல்வி**
கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து ஜாம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் வென்று வரும் ரகுபர் தாஸ், சுயேச்சை வேட்பாளர் சரயு ராயைக் காட்டிலும் 15,000 வாக்குகள் பின்தங்கி தோல்வியைச் சந்தித்துள்ளார். முன்னதாக பாஜகவில் இருந்த சரயு ராயு, இம்முறை கட்சியில் சீட் கொடுக்காததால் கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தோல்வியை ஒப்புக்கொண்ட ரகுபர் தாஸ், நேற்று மாலை ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார்.
**இரு தொகுதிகளிலும் வெற்றி**
ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட பர்ஹைத் மற்றும் தும்கா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பர்ஹைத்தில் பாஜக வேட்பாளர் சிமோன் மால்டோவை விட 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தும்காவில் பாஜக வேட்பாளர் லோயிஸ் மரண்டியை விட 13,188 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
**2014 முடிவு**
2014 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 37 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் 5 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
**ஐந்தாவது மாநிலத்தில் ஆட்சியை இழந்த பாஜக**
மக்களவைத் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் தனது ஆட்சியை இழந்து வருகிறது. 2014இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பல மாநிலங்களிலும் காலூன்றத் தொடங்கியது பாஜக. தமிழகம், கர்நாடகம், கேரளம், மிசோரம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தது. அதன்படி 2015இல் 13 மாநிலங்கள், 2016இல் 15 மாநிலங்கள், 2017இல் 19 மாநிலங்கள், 2018இல் 21 மாநிலங்கள் என பாஜக தனது ஆட்சியை இந்தியா முழுவதும் விரிவடையச் செய்தது.
ஆனால் தற்போது, ஜார்க்கண்டைத் தொடர்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் ஐந்து மாநிலங்களில் பாஜக தனது பலத்தை இழந்துள்ளது. அதன்படி பாஜக ஆளக்கூடிய 71 சதவிகித நிலப்பரப்பு தற்போது 40ஆக குறைந்துள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் எனத் தனது பிடியில் இருந்த மாநிலங்களிலேயே தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தற்போது ஜார்க்கண்டிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
�,”