‘தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஆளுநருக்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தமிழக சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் ஸ்டாலின், அதன்படி பிப்ரவரி எட்டாம் தேதி மீண்டும் நீட் விலக்கு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் நீட் விலக்கு சட்ட மசோதாவை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட மசோதாவுகக்கு ஆதரவு தெரிவித்து கட்சித் தலைவர்கள் உரையாற்றிய நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாரம்பரியமான பெருமைகளைக் குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஏதோ நீட் தேர்வுக்கு எதிராக விவாதிப்பதற்காக மட்டும் நாம் கூடவில்லை. நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை, உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவும் கூடியிருக்கிறோம். பல்வேறு, இனம், மொழி, பண்பாடுகள் கொண்ட இந்தியப் பெருநாட்டை உண்மையில் காக்கும் உன்னதமான தத்துவம் என்பது கூட்டாட்சித் தத்துவம்! அந்தக் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
பதினாறு வயதில் அரசியல் களத்தில் நான் நுழைந்தேன். எனது பொதுவாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அந்த உணர்வோடுதான் நான் இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இருந்த நுழைவுத் தேர்வை இரத்து செய்து, இதே சட்டமன்றத்தில்தான் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அந்த நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் செல்லும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றமும், நம் நாட்டின் உச்ச நீதிமன்றமும் துணை நின்றதும் இந்தச் சட்டமன்றத்திற்குத்தான்.
நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கூறி, குடியரசுத் தலைவர் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டம், தமிழ்நாட்டில் 10 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொண்டிருந்தோம். கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள ஏழைகளிலும், நடுத்தர வர்க்கத்திலிருந்தும் எண்ணற்றவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் பட்டம் பெற்று, இன்று பார் போற்ற, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சமூக நீதி, சட்ட நீதி, ஒடுக்கப்பட்டோர் உரிமை, தமிழினத்தின் மேன்மை, மொழி மேம்பாடு ஆகிய அனைத்துக்கும் அடித்தளம் அமைத்த இந்தச் சட்டமன்றத்தில் நின்று “நீட் என்ற சமூக அநீதியை அகற்ற, இந்தச் சட்டமன்றத்தால் முடியும்; நிச்சயமாக முடியும்.
,திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு மாதத்திற்குள் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம். இதேபோன்றுதான், ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அதாவது, 1968 சனவரி 23 ஆம் நாள் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டினார், முதலமைச்சராக இருந்த பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். அதில்தான், தமிழ்நாட்டு மாணவர்களின் தாகத்தைத் தீர்த்து, நமது மொழியுரிமையை நிலைநாட்டிய, வரலாற்றுப் பிரகடனமாக இருமொழிக் கொள்கையை நிறைவேற்றினார், பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா.
அண்ணா அவர்களால் அரசியல் களத்தில் பயிற்றுவிக்கப்பட்ட நாம், இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக் கல்விக் கொள்கையை முன்மொழிவதற்காக இந்தச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் இப்போது நாம் கூடியிருக்கிறோம்.
நூற்றாண்டு கண்ட வரலாற்றுப் புகழ்மிக்க கொள்கை முடிவுகளை மேற்கொண்ட உன்னதமான இந்த அவையின் இறையாண்மையைக் காப்பாற்றிட, 8 கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தச் சட்டமன்றத்திற்கு, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாத்திட நாம் இன்று கூடியிருக்கிறோம்.
நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்வு முறை கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற தேர்வு முறையும் கிடையாது. நீட் என்பது இந்திய மருத்துவக் கவுன்சில் ஒழுங்குமுறை விதிப்படி உருவாக்கப்பட்ட ஒரு தேர்வுதான். 2010-ஆம் ஆண்டு இப்படி ஒரு தேர்வு முறை முன்மொழியப்பட்டபோதே அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங்களும் எதிர்த்தது. இந்தியா முழுவதும் 115 வழக்குகள் இந்தத் தேர்வுக்கு எதிராகப் போடப்பட்டன. அப்படி வழக்குப் போட்டதில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்.
இந்த வழக்குகளை மொத்தமாக உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்தத் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றமே 18 ஜூலை 2013 அன்று தீர்ப்பளித்தது. அதுவும் உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதியரசரின் அமர்வே அந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அத்தோடு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அந்தத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், ஒன்றிய அரசாக பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தது. உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்தவுடனே, “Judgement is recalled” என்றும் “Hear this case afresh” என்றும்தான் 24.5.2016 அன்று உச்சநீதிமன்றம் கூறியது.
இதன் அடிப்படையில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு 11.4.2016 அன்று ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்து – நாடு முழுவதும் நீட்டைச் செயல்படுத்தியது. நீட் தேர்வு என்பதே தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சாதகமானதுதான். இந்தத் தேர்வின் மூலமாக மாணவ – மாணவியரிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள். அந்த நிறுவனங்களின் நன்மைக்காக மட்டுமே இந்தத் தேர்வு இன்றுவரை பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வளவு பணத்தைச் செலுத்தி பயிற்சி பெற முடியாதவர்களுக்காகத்தான் நாம் நீட் விலக்கு கேட்கிறோம். மசோதாவைக் கொண்டு வருகிறோம்.
.
நீட் தேர்வு என்பது ஏழை – எளிய மாணவர்களது கல்வி உரிமைக்குத் தடை போடுகிறது. அவர்களது மருத்துவக் கனவில் தடுப்புச் சுவர் எழுப்புகிறது. “நீ டாக்டர் ஆக முடியாது” என்று தடுக்கிறது. “உனக்குத் தகுதியில்லை” என்று தடுக்கிறது. அதனால்தான் நீட் விலக்கு மசோதாவைக் கொண்டு வருகிறோம்.
அந்தத் தேர்வில் நடந்த முறைகேடுகளை நான் இந்த மாமன்றத்தில் அதிகம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும் நான் சிலவற்றைக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.
2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக ஒன்றிய அரசே மக்களவையில் கூறியிருக்கிறது.
ஆள்மாறாட்டம் செய்வது – வினாத்தாள்களை திருடுவது – விடைத்தாள்களை மாற்றி வைப்பது – என அனைத்து முறைகேடுகளும் நடந்துள்ளன. இதனை சி.பி.ஐ. வழக்காகவும் பதிவு செய்துள்ளது. நம்முடைய தமிழ்நாடு மட்டுமல்ல, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக உதித் சூர்யா என்ற மாணவரும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுவரை 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் 6 பேர், ஒரு இடைத்தரகர் என 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படங்களை நம் மாநில சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு இருக்கிறார்கள்.
கோவை மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது விஷயமாக வழக்கு தொடர்ந்தார். எதற்காக என்று கேட்டால் 700-க்கு என்னுடைய மதிப்பெண் 594 என்று அக்டோபர் 5-ஆம் தேதி இணையத்தில் காட்டுகிறது. அக்டோபர் 17-ஆம் தேதி 248 என்று காட்டுகிறது. இதுசம்பந்தமாக வழக்கு போட்டிருக்கிறார்.
தேர்வை நடத்தக்கூடியவர்கள் இதற்கு விளக்கம் தந்தாகவேண்டும். ஆனால் அதைப்பற்றிச் சொல்லாமல், வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு மனு போட்டார்கள். 9.2.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம், “நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு ஏன் மாற்றக் கூடாது” என்று ஒரு கேள்வி எழுப்பியது. இன்னொரு மாணவி தனது விடைத்தாள்களில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தான் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், விடைத்தாளில் 11 கேள்விகளுக்கு பதிலளிக்காதது போல இருக்கிறது என்றும் வழக்கு போட்டார்.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 15 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவையில் ஒன்றிய அரசே 3-12-2021 அன்று அறிவித்திருக்கிறது. கடந்த 29-9-2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 12 அன்று நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆள்மாறாட்டம் நடந்துள்ளது எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள்.
ஆகவே, நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீட் தேர்வு ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை; பல்வேறு குளறுபடிகளோடு ஏழை–எளிய மாணவர்களைத் தகுதி என்ற பெயரில் ஓரங்கட்டக் கொண்டுவரப்பட்ட தேர்வு. அதனால்தான் இந்தத் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம்; அதிலிருந்து விலக்கு கோருகிறோம். நீட் தேர்வு என்பதை விட, அதை ‘மாணவர்களைக் கொல்லும் தேர்வு’ என்றே கூறிட வேண்டும்.
நீட் என்பது தேர்வு அல்ல, ஒரு பலிபீடம். அரியலூர் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்களை, இந்தியாவின் வருங்காலத் தலைமுறையை நாம் இழந்திருக்கிறோம். அந்தக் குழந்தைகளை-இளம் பிஞ்சுகளை பெற்றோர்கள் மட்டும் பறிகொடுக்கவில்லை; நாமும் இழந்தோம்! தமிழ்நாடு மட்டுமல்ல; இந்திய நாடே பறிகொடுத்துள்ளது.
சில மாணவர்களைக் கல்லறைக்கும், சில மாணவர்களைச் சிறைச்சாலைக்கும் அனுப்பிய இந்த நீட் தேர்வு தேவையா என்பதுதான் இந்த மாமன்றத்தில் நான் எழுப்பக்கூடிய கேள்வி.
அதனால்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை நாம் நிறைவேற்றினோமே தவிர; ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நிறைவேற்றிவிடவில்லை. நீட் தேர்வு சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. இராஜன் தலைமையில் 10-6-2021 அன்று ஒரு குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அந்தக் கருத்துகளின் அடிப்படையில், 14-7-2021 அன்று இக்குழு 193 பக்க அறிக்கையை அரசுக்கு அளித்தது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே-அந்தத் தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு தரவுகளுடன் சொன்னது.
இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை அளிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் என்கிற முறையில் நான் அமைத்தேன். இறுதியில் எல்லாவற்றையும் பரிசீலித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்ற மசோதா இந்தச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவு விரிவாக ஆராய்ந்து, உரிய தரவுகளுடன்தான் இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம்.
மொத்தம் இந்த அவையில் இருக்கக்கூடிய 234 உறுப்பினர்களில், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களையும் சேர்த்து, 4 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கலாக மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவோடும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வை மட்டுமல்ல இந்த மாமன்றத்தின் இறையாண்மை உணர்வையும் எதிரொலித்தது. அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாறாக அதுகுறித்து எந்த முடிவெடுக்காமல் 142 நாட்கள் வைத்திருந்தார்கள். அதுகுறித்து, நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நிலையில், மீண்டும் நமக்கே திருப்பி அனுப்பி உள்ளார். அந்த மசோதாவை நிராகரிப்பதற்காக அவர் சொன்ன காரணங்கள், சரியானவை அல்ல என்பதை இந்த மாமன்றத்தில் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை ஊகங்களின் அடிப்படையிலானது என்று தெரிவித்துள்ளார் மாண்புமிகு ஆளுநர் அவர்கள். அரசாணை எண் 283, மருத்துவம்–மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-6-2021 அன்று நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்துகளை இக்குழு கேட்டுப் பெற்றது. மின்னஞ்சல், அஞ்சல் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது கருத்துகளை வழங்கியிருந்தார்கள்.
பிற்பகல் 12-35
இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு அரசுக்கு 14-7-2021 அன்று அளித்தது. அதாவது தனிப்பட்ட சிலரின் ஊகங்களின் அடிப்படையில் அல்ல; சுமார் ஒரு இலட்சம் பேரின் கருத்துகளைக் கேட்டுப் பெற்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பரிந்துரை அறிக்கையில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஊகம் அல்ல. இதற்கான புள்ளிவிவரமும் அந்த அறிக்கையில் விரிவாக உள்ளது.
அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்த அறிக்கையில் புள்ளிவிவரங்களோடு சொல்லப்பட்டுள்ளது.
‘நீட் தேர்வு தகுதிக்கு எதிரானது’ என்று இந்த அறிக்கை சொல்வதை ஆளுநர் விமர்சித்துள்ளார். இதனை மறுக்கும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் நீதியரசர் ஏ.கே. இராஜன் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தேர்வானவர்களில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை சொல்கிறது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களையும்-நீட் தேர்வால் பலன் பெற்றவர்கள் என்று யாரும் தவறாகக் கணக்கிட்டுக் கொள்ளக் கூடாது என்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வுத் திறன் குறித்து இந்த அறிக்கையில் இல்லை என்று ஆளுநர் அவர்கள் கூறி இருக்கிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் அறிவியல் பிரிவு மாணவர்கள் அனைவருமே இந்த மூன்று பாடங்களையும் படிக்கிறார்கள். எனவே, இம்மூன்று பாடங்களில் தேர்ந்தவர்கள்தான் பன்னிரெண்டாம் வகுப்பில் உயர்ந்த இடங்களைப் பெறுகிறார்கள். அதனால்தான் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணே போதுமானது என்று நாங்கள் சொல்கிறோம். இன்னொரு தேர்வு தேவையில்லை என்று நாம் இங்கே குறிப்பிடுகிறோம். நீட் தேர்வு வருவதற்கு முன்பு, 90 விழுக்காட்டுக்கும் மேலான இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்கள்தான் பெற்று வந்தார்கள். ஆனால், நீட் தேர்வுக்குப் பின்னர், மருத்துவப் படிப்பில் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கருப்பாக உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எத்தகைய பாகுபாடோ-அதைப்போல மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் படித்தவர்களது புத்தகங்களில் இருந்து வினாத்தாள் தயாரிக்காததும் மிகப்பெரிய பாகுபாடுதான்.
நீட் என்பது கல்விமுறை அல்ல. அது பயிற்சிமுறை. இது தனியார் பயிற்சி மையங்களைத்தான் ஊக்குவிக்கும். தனிப் பயிற்சி பெற முடியாதவர்கள், கல்வி பெறத் தகுதியற்றவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது.
ஒரு மாணவர் இரண்டு மூன்று ஆண்டுகள் தனிப் பயிற்சிக்காக ஒதுக்க வேண்டும்; இலட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இதனைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழை எளிய மாணவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? என்பதுதான் திரும்பத் திரும்ப நாம் எழுப்புகிற கேள்வியாகும்.
கட்டணம் செலுத்திப் பயிற்சி எடுக்க முடியாதவர்களால் மருத்துவப் படிப்புக்கு உள்ளே நுழைய முடியாது என்பதே-கட்டணம் செலுத்தி இரண்டு மூன்றாண்டு காலம் பயிற்சி பெற முடிந்தவர்களால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்பதே-இந்த 21 ஆம் நூற்றாண்டில் மாபெரும் அறிவுத் தீண்டாமை! தகுதி என்ற போர்வையில் உள்ள இந்தத் தீண்டாமை அகற்றப்பட வேண்டாமா? அதற்காகத்தான் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் இங்கே நாம் கொண்டு வந்திருக்கிறோம்” என்று பேசிய முதல்வர் தொடர்ந்து…
“என்னுடைய வேதனையெல்லாம், ஏழை – எளிய – கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மிக மோசமான ஒரு தேர்வு குறித்து – அது மோசமானதுதான் என்று இவ்வளவு நீண்ட நேரம் வாதிட வேண்டியதாக இருக்கிறதே என்பது தான் என் வருத்தம்.
இது ஏதோ நீட் விவகாரம் மட்டுமல்ல என்பதை நான் தொடக்கத்தில் சொன்னேன். ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றினோம் – அதை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று மட்டும் நான் இதைப் பார்க்கவில்லை. யாரும் அப்படிப் பார்க்க மாட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். இந்தச் சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பியதன்மூலமாக நமது தமிழ்நாடு மாநிலத்தின் உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூட்டாட்சித் தத்துவம் தலைகவிழ்ந்து நிற்கிறது. அதுதான் வேதனைக்குரியது. அதுதான் கவலையளிக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமான, வழிகாட்டியான தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவை நிறுத்தி வைக்க முடியும், உதாசீனப்படுத்த முடியும் என்றால், இந்த இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களின் கதி என்ன? அரசியல் சட்டம் வகுத்துத் தந்துள்ள ஒன்றிய – மாநில அரசுகளின் உறவு எங்கே போகும்?
பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களின் நிலைமை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கொள்கை முடிவை, வெறும் நியமனப் பதவியில் அமர்ந்திருக்கும் ஓர் ஆளுநர் மதிக்காமல் திருப்பி அனுப்புவது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது அல்லவா?
பிறகு எந்த நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள்? யாரை நம்பி வாக்களிப்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வர் ஸ்டாலின்,
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் நம்முடைய இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு. அதனைச் சிதைக்கலாமா?
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டமுன்வடிவை 13-9-2021 அன்று நிறைவேற்றி அனுப்பினோம். அரசியல் சட்டப்படி ஆளுநர் அவர்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்ன ஒன்றிய – மாநில உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரையில் சொல்லப்பட்டுள்ளதை இந்த அவையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பொதுப் பட்டியலில் (Concurrent List) உள்ள பொருள் குறித்து மாநிலச் சட்டமன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாக்கவே அரசியல் சட்டத்தில் 254 (1) என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் முரண்படும் ஒரு சட்டத்தை மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றினால், அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கக்கோரி ஆளுநருக்கு மாநில அமைச்சரவை அறிவுறுத்தலாம். மாநில அமைச்சரவை அப்படி அறிவுறுத்தினால், ஆளுநர் அதன்படி உடனடியாகச் செய்தாக வேண்டும்.
அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன்கீழ் மாநிலச் சட்டமன்றம் சட்டம் நிறைவேற்றினால், அரசியல் சட்டப்பிரிவு 200-ன்கீழ் அதற்கு ஒப்புதல் வழங்கக்கூடிய அதிகாரத்தை ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். ‘The Governor must abide by the advice of the Council of the Ministers.’
ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு தன் சொந்தக் கொள்கைக்கு மாறாக உள்ளது என்று நிராகரிக்காமல், அமைச்சரவை என்ன அறிவுரை வழங்குகிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும். அதைத்தான் 2006 இல் இருந்த ஆளுநர் , ‘நுழைவுத் தேர்வு ரத்து’ என்று சட்டமுன்வடிவை நம்முடைய கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து இந்தச் சட்டமன்றம் நிறைவேற்றி அந்த வரலாற்றைப் படைத்திருக்கிறார்.
நமக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தின் அடிப்படையில்தான், 13-9-2021 அன்று நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கச் சட்டமுன்வடிவினை நாம் நிறைவேற்றினோம். அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியது ஆளுநரின் அரசியல் சட்டக் கடமை. அந்தக் கடமையை முறையாக இனியாவது ஆளுநர் செய்வார் என நான் நினைக்கிறேன், எதிர்பார்க்கிறேன். நாம் மட்டுமல்ல, நீங்களும் எதிர்பார்க்கலாம். அதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின், சட்டமியற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டு ஆளுநர் நிறைவேற்ற வேண்டிய கடமை.
அந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்பதால் நானே நேரில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன். ஆளுநரிடம் பல முறை நான் வலியுறுத்தியிருக்கிறேன். நம்முடைய மூத்த அமைச்சர், அவையின் முன்னவர், மாண்புமிகு துரைமுருகன் அவர்களும் நேரில் சந்தித்து ஆளுநரை வலியுறுத்தினார். நம் மாநில எம்.பி.க்கள் எல்லாம் குடியரசுத் தலைவரை சந்திக்க முயற்சி செய்து, அவரது அலுவலகத்தில் மனுவினை அளித்து வலியுறுத்தினார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து விளக்கியிருக்கிறோம்.
எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.-வைச் சேர்ந்த எம்.பி.க்கள், அதேபோன்று பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய எம்.பி.க்கள் அனைவரும் நேரடியாகச் சென்று, சொல்லியிருக்கிறோம். இந்தநிலையில்தான், ஏறக்குறைய 142 நாட்கள் கழித்து, ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பி, மீண்டும் சட்டமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆளுநர் அவர்கள்.
இந்த அசாதாரணச் சூழலில், அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன்கீழ் சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய சட்டமியற்றும் அதிகாரத்தைக் கேள்வி கேட்கக்கூடிய வகையில் மாண்புமிகு ஆளுநரின் செயல் இருக்கிற காரணத்தினால், கடந்த 5-2-2022 சனிக்கிழமை அன்று அனைத்துக் கட்சியைச் சார்ந்த சட்டமன்றக் கட்சியில் இடம் பெற்றிருக்கின்ற தலைவர்களின் கூட்டத்தினை நடத்தினோம்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான், இன்றைக்கு ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவினை இந்த அவையில் மீண்டும் நான் முன்மொழிகிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள், 30-3-1967 இல் இதே அவையில், ஆளுநர் உரைமீதான விவாதத்தில் பேசியபோது, “கவர்னர் பதவியே வேண்டாமென்று முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்ன நேரத்தில் அது ரொம்ப பைத்தியக்காரத்தனம் என்று பேசிக் கொண்டிருந்த அரசியல் வட்டாரத்தில், ஒரு பகுதி இன்றையதினம் அதே கண்ணோட்டத்திற்கு வந்திருப்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்திப்பார்க்கிறேன்.
அது போன்றதொரு சூழலை, நமது ஆளுநர் நிச்சயம் உருவாக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை எண்ணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்கீழ் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் இந்த ‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவினை காலம்தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தன் உரையை நிறைவு செய்யும் போது… “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என்று குறிப்பிட்டார்.
இதன் பிறகு முதல்வர் முன்மொழிந்த நீட் விலக்கு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு நேற்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
**வேந்தன்**