தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 13) மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் முக்கால் மணி நேரம் நீடித்து மாலை 5.45க்கு முடிந்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது முதல்வருடன் இருந்தனர்.
இந்த சந்திப்பில் பேசப்பட்டது குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைக்கின்றன.
“கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்துவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் பிறகு நிர்வாக நடைமுறைப்படி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சரியாக ஒரு மாதம் ஆகியும் அந்தத் தீர்மானத்துக்கு ஆளுநரிடம் இருந்து இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதால், அந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் முதலமைச்சர் வற்புறுத்தியிருக்கிறார். மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் ஆளுநரிடம் விளக்கியுள்ளார். ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பற்றிய தற்போதைய நிலைமையையும் ஆளுநரிடம் முதல்வர் விளக்கினார். இது ஒரு வழக்கமான சந்திப்புதான்” என்கிறார்கள்.
அதேநேரம் அரசியல் வட்டாரங்களில் வேறு சில தகவல்களும் உலா வருகின்றன.
“முதல்வர் ஸ்டாலின் அக்டோபர் 11 ஆம் தேதி மாலையே ஆளுநரை சந்திக்கப் போவதாக செய்திகள் கசிந்தன. முதல்வர் அலுவலகத்திலேயே அன்று ஆளுநர் சந்திப்பு இருப்பதாக வேறு சில அப்பாயின்மென்ட்களை தள்ளி வைத்தார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று முதல்வர் ஆளுநரை சந்திக்கவில்லை. மாறாக மறுநாள் அக்டோபர் 12 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை டீமை சந்தித்தார் ஆளுநர். அதன் பிறகு அடுத்த நாளான அக்டோபர் 13 ஆம் தேதி முதலமைச்சரை சந்தித்திருக்கிறார். அக்டோபர் 11 ஆம் தேதி முதல்வர் -ஆளுநர் சந்திப்பு நடைபெறாமல் போனதற்கு வேறு சில காரணங்கள் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுகின்றன.ஒரு முதலமைச்சர் சந்திக்க நேரம் கேட்கும்போது ஆளுநர் அதை மறுக்கக கூடாது, மறுக்க மாட்டார். ஏனென்றால் அமைச்சரவை சார்பில் முதல்வர் பேச நேரம் கேட்கும்போது அவரை சந்திப்பதுதான் ஆளுநரின் முதல் கடமை. எனவே அக்டோபர் 11 ஆம் தேதி ஆளுநர் முதல்வர் சந்திப்பை முதல்வர்தான் மாற்றியிருக்கலாமே தவிர ஆளுநர் மாற்றியிருக்க வாய்ப்பில்லை. அதேநேரம் 12 ஆம் தேதி தமிழக பாஜக டீம் ஆளுநரை சந்தித்து, திமுக எம்பி கடலூர் ரமேஷ் மீதான கொலை வழக்கு மற்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவித்தது. இந்த நிலையில் மறுநாள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கிறார் ஆளுநர். எனவே இந்த சந்திப்புக்கு ஆளுநரே அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பில் தெரிவிக்கிறார்கள்
ஆளுநர் தானாகவே முன் வந்து முதல்வரை அழைத்துப் பேசலாம். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துகொள்ளலாம்.அதற்கு ஆளுநருக்கு முழு உரிமை உண்டு. அவ்வாறு ஆளுநர் அழைக்கும்போது முதல்வரும் சென்று அதுபற்றி விளக்குவதற்கு கடமைப்பட்டவர்தான் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சிருக்கிறது.
இந்த சந்திப்புக்கான துவக்கப் புள்ளி முதல்வரிடம் இருந்து சென்றதா, ஆளுநரிடம் இருந்து வந்ததா என்ற கேள்விதான் இப்போது அதிகாரிகள், அரசியல் வட்டாரத்தில் பட்டிமன்றப் பொருளாகியிருக்கிறது. எந்த வகையிலோ சந்திப்பு நடந்து முடிந்துவிட்ட நிலையில்,இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றியும் முதல்வரிடம் தனியாக ஆளுநர் பேசியதாகச் சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் கடலூர் ரமேஷ் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சரியம் இல்லை” என்கிறார்கள்.
**-வணங்காமுடி**
�,