pஅன்பழகன் உடல் நிலை: நேரில் சென்ற ஸ்டாலின்

politics

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ரேலா மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தார்.

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜூன் 4ஆம் தேதி ரேலா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அன்பழகனுக்கு 80% செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தது.

அவரது உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில், நேற்று மாலை 7 மணி நிலவரப்படி அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து 40 சதவிகிதம் மட்டுமே செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகவும் 60% அளவுக்கு அவரே சுவாசிப்பதாகவும் மருத்துவ வட்டாரங்களிலிருந்து நம்பகமான தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் [60% இயற்கை சுவாசம்: முன்னேற்ற அன்பழகன்](https://www.minnambalam.com/public/2020/06/05/71/janbazhgan-mla-better-health-corona-treatment) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்பழகனின் உடல் நிலை குறித்து ரேலா மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அரசு தரப்பில் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரேலா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ குழுவினரிடம் அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 6) திமுக தலைவர் ஸ்டாலின் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்குச் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை – குரோம்பேட்டையில் உள்ள ரேலா இன்ஸ்டிட்யூட் அண்ட் மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகனின் உடல் நலன் குறித்து நாள்தோறும் தொலைபேசி வாயிலாக விசாரித்தறிந்து வந்த நிலையில், இன்று காலை, அம்மருத்துவமனைக்கு நேரில் சென்று, அன்பழகனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவினர்களான அம்மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகமது ரேலா, இளங்குமரன் ஆகியோரிடத்தில், அவரது உடல் நலன் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுடனான சந்திப்பின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *