~3 ஆண்டு நிறைவு: லட்டு வழங்கி கொண்டாடிய முதல்வர்!

Published On:

| By Balaji

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சிறை சென்றார். இதனையடுத்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. பின்னர் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்த எடப்பாடி, பன்னீர்செல்வத்துடன் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் தன்வசப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைப் பொறுப்பேற்று இன்றுடன் (பிப்ரவரி 16) நான்காவது ஆண்டு தொடங்குகிறது. இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற முதல்வருக்கு, அதிமுக நிர்வாகிகள் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அதன்பிறகு, அலுவலகம் உள்ளே சென்ற அவருக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாவட்ட வாரியாக நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share