சசிகலாவுக்கு எதிராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது மீண்டும் கட்சியை மீட்டெடுப்போம் என ஆடியோ வெளியிட்டு வருகிறார். 40க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவுடன் பேசிய அதிமுகவினரைக் கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 16 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்,.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தும், சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகின. எனவே சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தை அடுத்த ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தேர்தலுக்கு முன் அரசியலிலிருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாகப் பகிரங்கமாகச் செய்தி வெளியிட்ட சசிகலா, தேர்தல் முடிவுக்குப் பின்னர் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக, விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சசிகலா தொலைபேசியில் பேசும்போது, சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவது, ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயலலிதா மற்றும் அதிமுகவினரின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களைகளாகவும், தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், மீண்டும் அதிமுகவை அபகரித்துவிட வஞ்சக வலையை விரித்துக் கொண்டுள்ளனர்.
ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக, அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை, அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்கியதையும், அதிமுக தலைமை அலுவலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வரவேற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சி.வி.சண்முகம் பேசுகையில், ”அதிமுகவை யாராலும் ஆட்டவும் , அசைக்கவும் முடியாது. சசிகலா அல்ல அவரது குடும்பமே வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. தொலைபேசி மூலமாகத் தினமும் ஒரு நாடகத்தை நடத்துகிறார். மீண்டும் அதிமுகவை ஏமாற்றி கொள்ளை அடிக்கலாம் என்று நினைக்கிறார். சசிகலா அடித்த கொள்ளையால் தான் அம்மாவே சிறைக்குச் சென்றார். மன்னார்குடி குடும்பத்தினரை எக்காரணம் கொண்டும் நாம் நெருங்க விடக்கூடாது. அந்த துரோகிகளைக் கண்டு, ஜாக்கிரதையாக நம் இயக்கத்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் டி.கல்லுப்பட்டியிலுள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
**-பிரியா**
�,