கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மீண்டும் ஆட்சியில் தொடர்வதற்கு உதவியது, கொங்கு மண்டலத்தில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த அசாத்திய வெற்றிதான். கொங்கு மண்டலத்தின் தலைமையிடமாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக வென்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாகக் கருதப்படும் அமைச்சர் வேலுமணியின் சொந்தத் தொகுதியான தொண்டாமுத்துார் தொகுதியும் அங்கேதான் இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்ணின் மைந்தர் என்பதால், கோவையின் மீது அவருக்கு ஒரு சிறப்பு கவனம் இருக்கிறது. தன் சொந்த ஊரான எடப்பாடிக்கு அவர் செல்வதாக இருந்தாலும் கோவை விமான நிலையம் வந்து கோவையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, அவருடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் பலரும் கோவையில் பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். இவ்வாறு அரசியல்ரீதியாகவும், சமுதாயரீதியாகவும் முதல்வருக்கு நெருக்கமான கோவை மாவட்டத்தில் அவருடைய பரப்புரைப் பயணம், பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது.
அதனால் இந்த மாவட்டத்தில் மட்டும் அவருடைய பரப்புரைப் பயணம், 2 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்தது. அமைச்சர் வேலுமணியின் தொகுதியில் 2 நாட்களும் 2 இடங்களில் பேசுவதாக பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் நாளான நேற்று காலையிலேயே அவரது பரப்புரைப் பயணம் தொடங்கியது. அதற்கு முந்தைய நாளே கோவையிலுள்ள தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொடிசியா, இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, தொழில் வர்த்தக சபை போன்ற கோவையின் முக்கிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று, தங்களுடைய கோரிக்கைகளை விளக்கி, மனுக்களும் கொடுத்தனர். அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக ஆட்சியில் மின் வெட்டால் கோவைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நினைவுபடுத்தி, தற்போது மின் மிகை மாநிலமாக கோவை இருப்பதையும், அதனால் தமிழகத்துக்கு வந்துள்ள தொழில்களையும் புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.
கோவையில் நடந்துவரும் கட்டமைப்புப் பணிகள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இந்தப் பணிகள் தொடரவும் மேலும் வளர்ச்சியை எட்டவும் தொழில் அமைப்புகள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். ஆனால் தொழில் அமைப்பினரின் மிக முக்கியக் கோரிக்கையான விமான நிலைய விரிவாக்கம் அல்லது புதிய விமான நிலையம் குறித்து அவரிடமிருந்து ‘பாசிட்டிவ்’ ஆன பதில் எதுவும் வராததால் தொழில் அமைப்பினரிடம் சற்று வருத்தம் ஏற்பட்டதை உணரமுடிந்தது.
மறுநாள் காலையில் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனை வணங்கி, அவர் தனது பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினார். அங்கேயே அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு ராஜ வீதி தேர்முட்டி, செல்வபுரம் ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி பேசினார். பேரூர் ஆதீனத்திடம் சென்று ஆசி வாங்கிய பின்பு, அமைச்சர் வேலுமணியின் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூருக்குச் சென்றார். அங்கே அவருக்கு படு அமர்க்களமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் வரும் சாலையில் இரண்டு பக்கங்களிலும் எக்கச்சக்கமான ஆட்கள் திரண்டிருந்தனர். அதிமுக கொடிகள் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டிருந்தன. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர் வேலுமணியின் கட்அவுட்டும் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தது. நுாற்றுக்கணக்கான பேனர்களில் முதல்வரை வானாளாவப் புகழும் வார்த்தைகள் வசீகரித்தன. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான போஸ்களில் பளிச்சிட்டார் முதல்வர் பழனிசாமி.
செண்டை மேளம், கடவுள்களின் அவதாரம் தாங்கிய திருநங்கைகள், டிரம் செட், முளைப்பாரி ஊர்வலம் என ஒரு திருவிழா கோலாகலத்தில் இருந்தது குனியமுத்துார். கூட்டத்தைப் பார்த்த முதல்வர் பழனிசாமி மிகவும் உற்சாகமாகி விட்டார். காலையில் ராஜவீதியில் அவர் பேசத் தொடங்கியபோது, அங்கே அவ்வளவாக கூட்டமில்லை. மைக் ரொம்பவே பிரச்சினை செய்தது. முதலில் கடுப்பாகி பேச்சையே முடிக்கப் போனவர், அதன்பின் தொடர்ந்து சிறிது நேரம் பேசினார். அங்கே ஸ்டாலினை சற்று மென்மையாக வசை பாட ஆரம்பித்தவர், அடுத்தடுத்த பாயின்ட்களில் விதவிதமான குற்றச்சாட்டுகளில் வெளுத்துக்கட்டினார்.
முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது திமுக சார்பில் ஆளுநரிடம் கொடுத்த புகார் மனுவைப் பற்றி ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் பேசினார். ‘‘திருநெல்வேலி – தென்காசி இடையில் ரோடு போட முதலில் விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு, வரும் 29ஆம் தேதியன்றுதான் மீண்டும் டெண்டர் விடப்படவுள்ளது. ஆனால் அந்த ரோடு அமைத்ததில் 450 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக திமுக ஆளுநரிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதிலிருந்தே ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது புரிகிறது’’ என்றார்.
‘‘மடியில் கனமில்லை வழியில் பயமில்லை!’’ என்றும், ‘‘எங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பற்றி ஸ்டாலினுடன் விவாதம் செய்வதற்கு நான் தயார்; நீங்கள் வருகிறீர்களா… ஆனால் துண்டுச்சீட்டு இல்லாமல் வர வேண்டும்!’’ என்றும் மீண்டும் மீண்டும் பேசினார். அதற்கு தொண்டர்களிடம் பலத்த கைதட்டல் கிடைத்தது. காலையில் ராஜ வீதியில் பேசத் தொடங்கியபோது, திரு.ஸ்டாலின் என்று மரியாதையுடன் பேசத்துவங்கிய முதல்வர் பழனிசாமி, குனியமுத்தூரில் பேசும்போது, ‘நீ வா, போ, சொல்லு, உனக்கு தைரியமிருக்கா’ என்று ஸ்டாலினை ஒருமையில் கடுமையாக வசைபாடத் தொடங்கினார்.
எல்லாவற்றுக்கும் உச்சமாக ‘‘ஒவ்வொரு கூட்டத்துலயும் நான் யார் தெரியுமா, கருணாநிதியின் மகன் என்று ஸ்டாலின் சொல்லிக்கொள்கிறார். அதை யாரும் மறுக்கவில்லையே… அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்… கருணாநிதிக்கு நீ மட்டுமா மகன்… அவருக்கு பல மகன்கள் இருக்கிறார்கள்!’’ என்று கடுமையாகப் பேசியவர், ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்டு, ‘‘மதுரையில் இருக்கும் அழகிரியும்தான் அவரின் மகன்!’’ என்று கூடுதலாக ஒரு வார்த்தையையும் சொல்லி சமாளித்தார்.
ஸ்டாலினால் வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஆக முடியாது என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர் பழனிசாமி, அதிமுகவை உடைக்க நினைக்கிறார் ஸ்டாலின்; ஆனால் திமுகதான் உடையப் போகிறது என்றும் எச்சரித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பும் கட்டப் பஞ்சாயத்தும்தான் அதிகமாகும் என்பதைத்தான் ஒவ்வொரு கூட்டத்திலும் தொடக்க உரையாகச் சொன்னார்.
கோவையில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், கேள்வி கேட்ட பெண்ணுக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்றும் ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பினார். குனியமுத்துாரில் வேலுமணியைப் புகழ்ந்து மட்டுமே அவர் பேசியபோது, கைதட்டலும் விசிலும் முடிவதற்கே பல நிமிடங்களானது.
ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டைப் பற்றி அவர் பேசும்போது, ‘திமுகவின் 13 அமைச்சர்கள் மீதும் எங்கள் அம்மா பொய்வழக்குப் போட்டார்’ என்று பேசவும் எல்லோரும் அதிர்ந்து போனார்கள். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவருடைய பேச்சை எடுத்து திமுகவினர் மீம்ஸ்களைத் தட்டிவிட அது காட்டுத்தீ வேகத்தில் வைரலாகப் பரவியது. பொங்கலுக்குக் கொடுத்த 2,500 ரூபாய் ரொக்கம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்ததை எல்லா இடங்களிலும் மிக விரிவாகப் பேசினார். அதற்கு பெண்கள், மாணவர்கள் மத்தியில் அப்ளாஸ் கிடைத்தது.
கோவையிலுள்ள இஸ்லாமிய ஜமாத்களின் நிர்வாகிகளுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் வேலுமணி. அதில் பேசியவர்கள், ‘சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்தனர். அதுபற்றி எந்தவொரு உத்தரவாதத்தையும் முதல்வர் பழனிசாமி தரவில்லை. ஆனால் ‘எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் இஸ்லாமியர்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்று ஆணித்தரமாகப் பேசினார் எடப்பாடி.
ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்திய பின்னும், மாநில அரசு தரும் 6 கோடி ரூபாய் மானியத்தை 10 கோடியாக உயர்த்தியது பற்றியும், நாகூர் தர்காவுக்கு குளக்கரை காம்பவுண்ட் கட்டுவதற்கு ஐந்தரை கோடி ரூபாய் கொடுத்ததையும் நினைவுபடுத்திப் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது; என்னை யாரும் அடிமைப்படுத்தவும் முடியாது’ என்றும் ஏதோ ஓர் அர்த்தத்தில் அழுத்தமாகச் சொன்னார். அதன் அர்த்தம் பலருக்கும் புரியவேயில்லை.
அந்த கலந்துரையாடலில் அமைச்சர் வேலுமணி பேசும்போது, ‘அதிமுகவுக்குக் கொள்கை வேறு கூட்டணி வேறு. தேர்தலுக்காக மட்டும்தான் கூட்டணி. எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்துக்கொடுத்ததுதான் எங்கள் கொள்கை. அதனால் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் ஒரு இன்ச் அளவுக்குக் கூட நாங்கள் பின் வாங்க மாட்டோம்’ என்று முதல்வர் சொன்னதாக பல விஷயங்களைப் பேசினார். உள்ளூரில் கபர்ஸ்தானுக்காக அவர் செய்த நிதியுதவியைப் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசியபோது, பலத்த கரவொலி கிளம்பியது.
கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் அடுத்தடுத்த இடங்களில் பேசும்போதும் இதே பேச்சைத்தான் சற்று ஏற்ற இறக்கத்துடன் மாற்றி மாற்றிப் பேசினார். ஆனால் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த அதிமுக மீதான புகாருக்குப் பதிலடி கொடுப்பது போல திமுகவினரை மேலும் சாடினார். ரயிலில் திமுகவினர் பெண்களைத் தாக்கியது, சட்டசபையில் ஜெயலலிதாவைத் தாக்கியது, தொண்டாமுத்தூர் மக்கள் கிராம சபையில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்ணைத் தாக்கியது என்று சில விஷயங்களைச் சுட்டிக்காட்டி, ‘இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவைதான்; அதே கோவை மாவட்டத்தில்தான் பொள்ளாச்சியும் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
ஆனால் பொள்ளாச்சியில் அவருடைய பேச்சுக்கு மக்களிடம் பெரிதாக ரெஸ்பான்ஸ் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இன்றும் கோவையில் புலியகுளம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், அன்னுார், மேட்டுப்பாளையம் என பல இடங்களில் அவர் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். நேற்றை விட இன்று அதிகமான கூட்டத்தைக் கூட்டுவதற்கு அதிமுகவினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். நேற்று பஸ்களிலும் தனியார் வாகனங்களிலும் எக்கச்சக்கமான மக்கள் குவிக்கப்பட்டனர். இன்று இரவு வேலுமணியின் தொகுதியில் பரப்புரையை அவர் முடிப்பதால் அங்கே மெகா கூட்டத்தைத் திரட்ட வேலுமணியின் டீம் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலினுக்குக் கோவையில் திரண்ட கூட்டத்தை விட அதிக கூட்டத்தை எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்துக்குத் திரட்ட வேண்டுமென்பதில் அதிமுகவினர் குறிப்பாக அமைச்சர் வேலுமணி ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பது தெரியவந்தது. முதல்வரின் பரப்புரை மக்களிடம் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இன்னும் சில நாள்களுக்குப் பின்புதான் தெரியவரும்.
எடப்பாடியின் இரண்டு நாள் பரப்புரைக்கே கோவையில் கோடிகளில் காசு புரண்டு ஓடியதைப் பார்க்க முடிந்தது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பார்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட, கொங்கு மண்டலம்தான் தேர்தலிலும் கொழிக்கும் போலிருக்கிறது!
**–பாலசிங்கம், த.நிவேதா**�,”