அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (ஜூலை 7) பிற்பகல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்று இருதரப்பிலும் பரபரப்பான வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கின் விசாரணை, இன்று (ஜூலை 8) பிற்பகல் மீண்டும் தொடங்கியது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் காலாவதியாகிவிட்டதா, தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற அமைப்பு கட்சியில் உள்ளதா? பொதுக்குழு நோட்டீசில் யார் கையெழுத்திட வேண்டும்?, எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தன் அடுத்த கட்ட வாதங்களை முன் வைத்தது.
அதில், “அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. முந்தைய பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது வெளியிட்டதாகக் கூறப்படும் நிகழ்ச்சி நிரல்கள் கட்சி அலுவலகத்தால் விநியோகிக்கப்பட்டவை.
2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து, பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது, தலைமைக்கழக நிர்வாகிகள் இருக்கின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொதுக்குழுவுக்கு எந்தத் தடையும் இல்லை. 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ், மொத்த கட்சியும் தனக்கு எதிராக உள்ளதாகக் கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை.
ஆனால், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய, ஒட்டுமொத்த தொண்டர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உள்ளது. கட்சி விதிகளைத் திருத்த செயற்குழுவுக்கு அதிகாரமில்லை. செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவந்தபோதும், பொதுக்குழுவின் முன்வைத்து ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டது.
கடந்த டிசம்பருக்கு முன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை திருத்த செயற்குழு முடிவு செய்தது. செயற்குழு முடிவின்படி அடிப்படை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. செயற்குழுவுக்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு ஒப்புதல் பெற முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலும் செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
2016 டிசம்பர் 29ம் தேதி தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை கட்சி நிர்வாகிகள் நியமித்தனர். அதன்பின் சசிகலா சொத்து வழக்கில் சிறை சென்றார். 2017 செப்டம்பர் 12ல் நடந்த பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் தலைமைக் கழக நிர்வாகிகளால் அனுப்பப்பட்டது. அதில் தலைமைக்கழக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். அந்த அடிப்படையில் தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இரு பதவிகளும் காலியாகிவிட்டதால், தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர்” என எடுத்துரைத்தனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.
விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
–ஜெ.பிரகாஷ்