xஎடப்பாடி பழனிசாமி-முருகன்: என்ன பேசினார்கள்?

Published On:

| By Balaji

ஆகஸ்டு 17 ஆம் தேதி மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கொண்டாட அனுமதி கேட்டுத்தான் முதல்வரை முருகன் சந்தித்தார் என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொற்று நோய் காலம் என்பதை உணர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை ஊரடங்குக் கட்டுப்பாடுகள், 144 சட்ட விதிகளுக்கு உட்பட்டு கொண்டாடுவதற்கு ஆவண செய்யுமாறு முதல்வரை கேட்டிருக்கிறோம். அதுகுறித்து ஆலோசிச்சு சொல்றதா முதல்வர் சொல்லியிருக்காங்க. இதற்காக மட்டும்தான் முதல்வரை சந்தித்தேன்” என்று கூறினார்.

பாஜக தலைவர் முருகன் இப்படிச் சொன்னாலும் அதிமுக, பாஜக வட்டாரங்களில் முதல்வர்- முருகன் சந்திப்புக்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள்.

“அன்று மாலை பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கரு. நாகராஜனோடு முதல்வரை சந்திக்க சென்றார் எல். முருகன். கொஞ்ச நேரம் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விநாயகர் சதுர்த்தி விழா பற்றிய பாஜகவின் கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துச் சொன்னார் முருகன். முதல்வரும், ‘உங்களுக்கே தெரியும். இப்ப எல்லாத்தையுமே நாம மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கேட்டுதான் செய்யுறோம். அதேநேரம் இதுல சட்டம் ஒழுங்கும் வர்றதால நான் மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசிச்சு சொல்றேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

இந்த டாபிக் முடிந்த பிறகு கரு. நாகராஜனை காத்திருக்கச் சொல்லிவிட்டு முதல்வரும், முருகனும் மட்டும் கொஞ்ச நேரம் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதில் பாஜக -அதிமுக கூட்டணி பற்றி சமீப நாட்களாக நடந்துவரும் கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி பேசப்பட்டிருக்கின்றன. அப்போது தமிழக முதல்வர், ஒரு சில கணக்கீடுகளைக் குறிப்பிட்டுக் காட்டி, ‘நாடாளுமன்றத் தேர்தலைப் போல கடைசி நேர அவசரக் கோலத்தில் பங்கீடு எல்லாம் வேண்டாம். எனவே யோசித்து சீக்கிரம் முடிவெடுத்துச் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார். சந்திப்பு முடிந்து வெளியே வந்து கரு. நாகராஜனையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் முருகன். அப்புறம்தான் விநாயகர் சதுர்த்தி பிரச்சினை பற்றி பேசினோம் என்று சொல்லிப் புறப்பட்டார்.

சந்திப்புக்குப் பிறகு முருகன் தனது நெருக்கமான வட்டாரத்தில் கூறியபடி பார்த்தால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எடப்பாடி தயாராக இல்லை என்று சொன்னதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்த சந்திப்பின் விவரங்களை டெல்லிக்கும், ‘ஹைதராபாத்துக்கும்’ அனுப்பியிருக்கிறார் முருகன்” என்கிறார்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share