ராஜன் குறை
அகில இந்திய அண்ணா திமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மிகுந்த பரபரப்புக்கு இடையில் அறிவிக்கப்பட்டிருப்பது அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அவர் ஆதரவாளர்கள் குதூகலித்துக் கொண்டாடுகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பப்பட்டது. அனைவரையும் தக்கபடி “அனுசரிக்கும்” எடப்பாடியின் போக்கால் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆதரவு அவருக்கு இருந்தும் ஏன் தற்போது முதல்வராக இருக்கும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தாமதம், குழப்பம் என்ற கேள்விதான் அது.
அவரை எதிர்ப்பதாகக் கூறப்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னும் போதுமான ஆதரவு இல்லை; இப்போது சுத்தமாக இல்லை. மக்களிடையே ஓ.பி.எஸ்ஸுக்குச் செல்வாக்கு இருக்கிறது என்றோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் செல்வாக்கு இருக்கிறது என்றோ கூறவும் ஆதாரங்கள் கிடையாது. பன்னீர்செல்வத்துக்குப் பின்னால் இருப்பது பாரதீய ஜனதா கட்சி என்பதுதான் ஊரறிந்த ரகசியம். ஒரு சுருக்கமான ஃப்ளாஷ்பேக் இல்லாமல் எப்படி பாஜக தலைமையின் விரல்களில் கட்டப்பட்ட கயிறுகள்தான் அஇஅதிமுக தலைவர்களை ஆட்டுவிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாது. அந்தக் கயிறுகள் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, உளவுத்துறை என்று பலவடிவங்களில் இருப்பதையும் கடந்த நான்கு ஆண்டுகளின் செய்திகளை நினைத்துப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையைச் சட்டமன்றத்தில் எதிர்த்து வாக்களித்த பன்னீர்செல்வத்தை ஆட்சியில் இணைத்தது பாரதீய ஜனதா கட்சி என்பதை முதலில் நினைவுகூர வேண்டும். எடப்பாடியுடன் சேர்த்து அவரை பிணைத்தது மத்தியில் ஆளும் அவர்களது அதிகாரம்தான் என்பது தெளிவானது. அந்த இணைப்பு எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வராக்கிய சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து அகற்ற ஒப்புக்கொண்டதால் நிகழ்ந்தது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரையும், கட்சியையும் நிர்வகித்து வந்த சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை கட்சியிலிருந்து அகற்றி கட்சியைப் பலவீனப்படுத்த பாரதீய ஜனதா கட்சி விரும்பியது. ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் பாரதீய ஜனதா ஆதரவைப் பெற்றார். அவரை ஜல்லிக்கட்டு நாயகனாக மாற்ற முயற்சி நடந்தது. விழித்துக்கொண்ட சசிகலா அவரே முதல்வராக முனைந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் பாஜக தூண்டுதலில் தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவை எதிர்க்கத் தொடங்கினார். கூவாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாத்த சசிகலா முதல்வராக முடியாமல் உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு திடீரென்று வெளியானது. அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியை சசிகலா அணி முதல்வராக்கியது. அவரும் சசிகலாவின் அடிபணிந்து பதவியை ஏற்றுக்கொண்ட காணொலிக் காட்சி அனைவரது செல்பேசியிலும் காணக்கிடைத்தது. அப்படி முதல்வரானவர் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் அழுத்தத்துக்குப் பணிந்து சசிகலா, தினகரனுக்கு எதிராகத் திரும்பினார். ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்தார்.
இதனால் எடப்பாடி சசிகலா, தினகரனுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும், கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் போன்றவர் எடப்பாடி என்றும் மக்களிடையே பேசப்படுவதை கேட்க முடிந்தது. எடப்பாடி என்பது எட்டப்பன் என்பதுடன் சேர்ந்து ஒலிப்பதால் இந்த ஒப்பீடு. ஆனால் உண்மையான பிரச்சினை, எடப்பாடி சசிகலாவுக்கு துரோகம் செய்தார் என்பதல்ல. கொள்கையற்ற சுயநல அரசியலில் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால், எடப்பாடி தமிழக வரலாற்றுக்கு துரோகம் செய்கிறார் என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள நாம் சற்றே விரிவாக பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
**இந்திய வரலாறும், தமிழக வரலாறும்**
ஆங்கிலேய காலனீய ஆட்சியிலிருந்து இந்திய நிலப்பகுதி விடுதலை பெற்றபோது உருவான அரசியல் அடையாளம் இந்திய தேசம். அதில் பார்ப்பனீய கருத்தியலின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட இந்து அடையாளம் செல்வாக்கு செலுத்தியது. இஸ்லாமியர்கள் தனிநாடு கோரிக்கை வைத்து பிரிந்த பிறகும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவில்லையென்றாலும், கருத்தியல் மேலாதிக்கம் என்ற அளவில் பார்ப்பனீய கருத்தியல் வலுவாக இருந்தது. அதனால் தமிழக பார்ப்பனரல்லாதோர் இயக்கம், பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தென்னிந்தியாவை தனி குடியரசாக திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரியது. அது நிறைவேறவில்லை.
இந்த லட்சியத்தை முன்வைத்து அதற்காக வன்முறையற்ற வெகுஜன அரசியல் பாதையில், தேர்தல் பங்கேற்பின் மூலம் இயங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தலில் பங்கேற்பவர்கள் பிரிவினையை ஆதரிக்க இயலாது என்ற சட்டம் 1963ஆம் ஆண்டு இயற்றப்பட்டபோது திராவிட நாடு லட்சியத்தை இந்தியக் கூட்டாட்சிக்கு உட்பட்ட மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக்கொண்டது. ஆனால், தமிழக மக்களை திராவிடர் – தமிழர் என்ற அடையாளத்தில் கட்டமைப்பதில் வெற்றிபெற்றது. அதனால் தமிழகத்தில் திராவிட கட்சிகளே ஆட்சி செய்ய இயலும் என்ற நிலை உருவானது. அது பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை, மக்கள் நல திட்டங்களை சாத்தியப்படுத்தியுள்ளதாக அரசியல் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்திய குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் புரட்சிகர சக்திகளின் நோக்கம், இயக்கம் என்பது மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமூக நீதியை சாத்தியமாக்குவது, மக்கள் வாழ்வை மேம்படுத்துவது என்பதாகவே இருந்திருக்கிறது. இந்த வரலாற்றுப் போக்கை எதிர்க்கும் எதிர்ப்புரட்சி சக்திகள் ஒற்றை இந்து கலாசார அடையாளத்தை வலியுறுத்துவது, மீட்புவாத, பழமைவாத சிந்தனைகளை வலுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பெருமுதலீட்டிய செயல்பாடுகளை தங்குதடையின்றி நடைபெற வைப்பது என இயங்குகின்றன. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு இந்த பாசிச போக்கை பிரதிநிதித்துவம் செய்கிறது. மாநில உரிமைகளைப் பறிப்பது, மாநில அரசியல் சக்திகளை ஒடுக்குவது ஆகியவை பாரதீய ஜனதாவின் செயல்திட்டமாக உள்ளது. ஒற்றை இந்திய அடையாளம் அதுவும் ஒற்றை இந்து அடையாளம் என்பதே அதன் அரசியல். முஸ்லிம்களையும், பாகிஸ்தானையும் எதிரிகளாக கட்டமைத்து இந்து பாசிச அடையாளத்தை வலுப்படுத்தும் அரசியலை பாரதீய ஜனதா கட்சி தீவிரமாகச் செய்து வருகிறது. குடியுரிமை சட்ட சீர்திருத்தம், அத்துடன் இணைந்த குடிமக்கள் கணக்கெடுப்பு என்ற விபரீத முயற்சி கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் மாநில அரசியல் கட்சிகள் தலையெடுப்பது கண்டு கவலைப்பட்டது உண்மைதான். மாநில அடையாளம் வலுவடைந்தால் இந்திய தேசம் பிளவுபட்டுவிடும் என அஞ்சியது காங்கிரஸ். உதாரணமாக மெட்ராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு பிடிவாதமாக மறுத்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகே அந்த பெயர் மாற்றம் சாத்தியமானது. காலப்போக்கில் காங்கிரஸ் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸின் இடத்தை மாநிலக் கட்சிகள் எடுத்துக்கொண்டபிறகு அவற்றுடன் கூட்டணி சேர்ந்து மத்தியில் கூட்டாட்சி செய்யும் சாத்தியத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய நிலையில் காங்கிரஸ் பன்மைக்கு இடமளிக்கும் முற்போக்கான தேசிய சக்தியாகவும், பாரதீய ஜனதா கட்சி பாசிச அரசியல் சக்தியாகவும் மாறியுள்ளன என்பதே பல அரசியல் சிந்தனையாளர்களின் பார்வை எனலாம்.
**தமிழக வரலாற்றில் நிகழ்ந்தது என்ன?**
திமுக ஆட்சிக்கட்டில் ஏறிய இரண்டே ஆண்டுகளில், 1969ஆம் ஆண்டு அண்ணா மறைந்தார். அந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான பிளவை சந்தித்தது. இந்திரா காந்தியின் தீவிர சோஷலிஸ சார்பை எதிர்த்த நிலபிரபுத்துவ, வலதுசாரி சார்புள்ள தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இந்திராவை வெளியேற்றினார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் காமராஜ், இந்திரா எதிர்ப்பு ஸ்தாபன காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்தார். அண்ணா மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைமை பொறுப்பேற்ற கலைஞர், வங்கிகளை தேசிய மயமாக்குதல், மன்னர் மான்ய ஒழிப்பு போன்ற இந்திரா காந்தியின் முற்போக்கு திட்டங்களுக்கு ஆதரவு அளித்தார். அதனால் 1971 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த இந்திரா காந்தி ஒன்பதே ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு, சட்டமன்றத் தொகுதிகள் எதிலும் போட்டியிடாமல் விட்டுவிட்டார். காமராஜர், அவருடைய நெடுநாள் எதிரிகளான ராஜாஜியுடனும், இன்றைய பாஜகவின் பழைய வடிவமான ஜனசங் வாஜ்பேயியுடனும் கூட்டணி அமைத்தார். மத்தியில் இந்திராவும், மாநிலத்தில் கலைஞரும் பெரும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில்தான் திமுகவைப் பலவீனப்படுத்த அதைப் பிளப்பதற்கு எம்ஜிஆருக்குத் தூண்டுகோலாக இருந்தது காங்கிரஸ். அண்ணா திமுக என்ற கட்சி 1972ஆம் ஆண்டு உருவானது. பிளவுபட்ட திமுகவை ஒன்றுபட்ட காங்கிரஸ் வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜரும், இந்திராவும் இணைந்து போட்டியிட்டனர். அது நடக்கவில்லை. திமுக எதிர்ப்பு வாக்குகளெல்லாம் எம்.ஜி.ஆரிடம் சென்றன. காங்கிரஸ் மேலும் பலவீனப்பட்டது.
இந்திரா சோஷலிச பாதையில் சென்றாலும், நாட்டில் பரவும் எதிர்ப்பை சந்திக்க யதேச்சதிகாரமாக நெருக்கடி நிலையை அறிவித்தார். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டதால், தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் அதை எதிர்த்து நின்றார். அதனால் ஆட்சி கலைக்கப்பட்டது. இளைஞரணியில் இருந்த கலைஞர் மகன் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நாடே எதிர்த்த நெருக்கடி நிலையை எம்ஜிஆர் ஆதரித்தார். தன் கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திமுக என்று மாற்றினார். நெருக்கடி நிலை நீங்கி 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிட்டார்.
அன்றிலிருந்தே மாநில உரிமைகளை அதிகரிக்கும் முற்போக்கு அரசியலுக்கு மாற்றாக அதை பலவீனப்படுத்தும் எதிர்ப்புரட்சி சக்தியாகவே அகில இந்திய அண்ணா திமுக விளங்கி வருகிறது. மக்கள் செல்வாக்கை கணிசமாகப் பெற்றிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தேர்தல் வெற்றி என்ற தங்கள் நலன் கருதியாவது ஒரு சில அம்சங்களில் மாநில உரிமைகளுக்காக நின்றனர். சந்தர்ப்ப வசமாக முதல்வரான எடப்பாடி பழனிசாமியோ முற்றிலும் பாரதீய ஜனதா கட்சியின் பினாமியாக மாறி அவர்கள் ஆட்டுவிக்கும்படி ஆடுகிறார். ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் போட்டி, பேரங்கள் என்பவை பொம்மலாட்ட காட்சிகளே. கயிறுகளை ஆட்டுபவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்.
இந்தப் பொம்மலாட்டம் வேடிக்கை அல்ல. தூத்துக்குடி படுகொலைகளிலிருந்து, நீட் மரணங்களிலிருந்து, குடியுரிமைச் சட்டம், இட ஒதுக்கீடு தத்துவத்தை நீர்க்கச்செய்யும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இட ஒதுக்கீடு சட்டம், குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், வேளாண்மையை கார்ப்பரேட் மயமாக்கும் சட்டங்கள் வரை பல எதிர்ப்புரட்சி செயல்பாடுகளை நடத்தி வைக்கும் கொடூரமான பொம்மலாட்டம் இது. அதனால் தமிழக வரலாற்றின் தனிப்பெரும் எதிர்ப்புரட்சி நாயகன் என்றே எடப்பாடி பழனிசாமியைக் கூற வேண்டும்.
**கட்டுரையாளர் குறிப்பு:**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
�,”