~விவாதம்: எடப்பாடிக்கு ஸ்டாலின் மீண்டும் பதில்!

Published On:

| By Balaji

மீண்டும் தன்னை விவாதத்துக்கு அழைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தியா டுடே கான்க்லேவ் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இந்தியா டுடே நடத்தும் கான்க்லேவ் என்னும் நிகழ்ச்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் புள்ளிகள் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். மார்ச் 12ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்துகொண்டு, ‘துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் ஸ்டாலின் இதே மேடையில் விவாதம் நடத்தத் தயாரா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு நேற்று (மார்ச் 13) கான்க்லேவ் நிகழ்வில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

“கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, இந்தியா டுடே பத்திரிகையில், தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது – தமிழகத்துக்குத் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது – என்ற நிலையில் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பட்டியலில் பல்வேறு மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. அது எங்களுக்கெல்லாம் தலைகுனிவாகவே கருதுகிறோம். அப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தை பழனிசாமி நடத்திக்கொண்டிருக்கிறார் என்பது இந்த நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

நேற்றைய தினம் இந்த கான்க்லேவ் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, அவர் பேசும்போது, ‘என்னுடன் விவாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா?’ என்ற ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருக்கிறார்.

நான் அதையெல்லாம் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. நான் முன்னரே அதற்குப் பதில் சொல்லி இருக்கிறேன். ‘என்னை விவாதத்திற்கு வருமாறு நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தடையைத் திரும்பப் பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு நான் வரத் தயார் என்று அப்போதே சொல்லி இருக்கிறேன். அதற்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் இப்போது கேட்கும் கேள்வி, என்னை அழைத்து விவாதிக்கத் தயாரா என்று கேட்பதை விட, தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவாக இருக்கக் கூடிய நிலையில், இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் அந்தப் பட்டியலில் ஏன் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்று இந்தியா டுடேவிடம் பழனிசாமி கேட்டிருந்தால் நான் பாராட்டி இருப்பேன். அதற்கு அவருக்குத் தகுதி இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. இன்னும் ஒரு மாதத்தில் முடியப் போகும் நிலையில்தான் பழனிசாமியின் ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படப் போகிறது.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், எடப்பாடி தொகுதியில்கூட முதலமைச்சர் பழனிசாமி நிச்சயமாக வெற்றி பெற முடியாத நிலையில்தான் இருக்கிறார். எல்லாம் முடிந்த பிறகு என்ன நிலைக்கு அவர் ஆளாகப்போகிறார் என்பது பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

குறிப்பாக முதலமைச்சரைப் பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால் அவருடைய துறையான நெடுஞ்சாலைத்துறையில் ஏறக்குறைய 3,000 கோடி ரூபாய் வரையில் தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டரை சாதகமாக வழங்கி அதில் ஊழல் செய்திருக்கிறார் என்று எங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் – கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு – இதில் முறையாக விசாரிக்கப்பட்டு எல்லா முகாந்திரமும் இருக்கிறது. எனவே இதை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது.

உத்தரவு போட்ட அடுத்த நாளே முதலமைச்சர் பழனிசாமி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு பெற்றிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. அதனால்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் இன்றைக்குக் குறிப்பிட்டு இருக்கிறோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சரிலிருந்து – அமைச்சர்கள் வரையில் இருக்கும் ஊழல்களைப் பற்றி விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அவர் வாங்கி வைத்திருக்கிற தடையைத் திரும்பப் பெற்றால் விவாதம் நடத்தலாம்” என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share