தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆகஸ்டு 26) அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். மதுசூதனன் சில காலமாகவே முதுமை காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில்…. சில மாதங்கள் முன் அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிகமுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வராமல் மிகவும் கண்காணிப்போடு வீட்டிலேயே இருக்கிறார் மதுசூதனன்.
சில நாட்களுக்கு முன் வீட்டுக்குள்ளேயே அவர் கீழே விழுந்து கை எலும்பும் முறிவுற்ற நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் அறிந்து அவரது வீட்டுக்கே சென்றார். மதுசூதனின் உடல் நலம் பற்றி விசாரித்தறிந்தவர் கட்சியின் தற்போதைய நிலவரம் பற்றியும் பேசியிருக்கிறார்.
அதாவது இந்த வயது முதிர்ந்த நிலையில் கட்சியின் அவைத் தலைவர் பதவியில் மதுசூதனன் தொடர வேண்டுமா, அது அவருக்கும் தொந்தரவாக இருக்குமா என்று எடப்பாடி கருதுகிறார். மேலும் சில லோக்கல் நிர்வாகிகளைக் கூட மதுசூதனனால், அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றும் எடப்பாடிக்குத் தகவல் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் மதுசூதனனிடம் உடல் நலம் விசாரித்த எடப்பாடி, “உங்களை ரொம்ப தொந்தரவு பண்றமோ? கட்சிப் பணி சுமையா இருக்கா…” என்று கூறியிருக்கிறார். அதற்கு மதுசூதனன் மெல்லமாய், “இந்தக் கட்சிக்காக ரொம்ப காலமா உழைச்சிருக்கிறேன். அம்மா கொடுத்த கௌரவமான பதவி இது. நீங்களும் கௌரதையா வச்சிருக்கீங்க. நான் இருக்குறவரைக்கும் இந்த பதவியில இருந்துக்குறேனே… கௌரவமா போய் சேர்றேனே…’ என்று சொல்லியிருக்கிறார் மதுசூதனன். அப்போது கைகளை தூக்கி அவரை நோக்கி கும்பிட்டு சிரித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இந்த நிலையில்தான் அடுத்த அவைத் தலைவர் பற்றிய பேச்சுகளும் அதிமுகவில் துவங்கிவிட்டன என்கிறார்கள்.
[அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார்?](https://minnambalam.com/politics/2020/08/26/50/digital-thinnnai-admk-madhusudhanan-Presidium%20Chairman-next-anwarraja)
**-வேந்தன்**
�,