pஎடப்பாடி டெல்லி பயணத்தின் அஜெண்டா சசிகலா

Published On:

| By Balaji

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக இருக்கிறார் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… ஜனவரி 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு தொடர்பாக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எடப்பாடி செல்கிறார் என்று கூறப்பட்டாலும்… அது மட்டுமே அஜெண்டா அல்ல.

சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலா நேரடியாக சென்னை வந்து முதன்முதலில் ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி செல்லத் திட்டமிட்டிருக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் சசிகலா என்றும் தகவல்கள் வருகின்றன.

சசிகலா விவகாரத்தில் தினகரன் அண்மையில் டெல்லி சென்றபோது அவருக்கு டெல்லியில் முக்கிய புள்ளிகளை சந்திக்க உதவியது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்து தற்போது ஓய்விலிருக்கும் ஒரு விவிஐபி. அவர் மூலமாகத்தான் சசிகலா- பாஜக- எடப்பாடி ஆகிய மூன்று முனைகளையும் ஒன்றுபடுத்தும் படலங்கள் நடந்து வருகின்றன என்கிறார்கள்.

இதுபற்றி இந்த மூன்று வட்டாரங்களிலும் நாம் விசாரித்தபோது…

சசிகலா இப்போதும் அதிமுகவை தான் தன் கட்சி என்று சொல்லி வருகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னம்தான் தன் சின்னம் என்பதே இன்னும் கருத்தாக உள்ளது. அவர் சிறையில் இருந்த காலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சி சசிகலா ஆதரவாளர்களால் வெளியே உருவாக்கப்பட்டிருந்தாலும் அவர் சிறையை விட்டு வெளியே வந்த பின்பு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லவே விரும்புகிறார். இந்த தகவல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த விவிஐபி மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வரும் 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அதே 18ஆம் தேதி பாஜகவின் தூதுவர் ஒருவர் சிறையில் சென்று சசிகலாவையும் சந்திக்கிறார். அப்போது சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டு இறுதி செய்யப்படலாம் என்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து விட்ட பிறகு பாஜகவுக்கு தற்போது அதிமுகவை பலப்படுத்துவது வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி முக்கியமாக தெரிகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி தேர்தலை சந்திக்கும் போது அதிமுகவின் ஓட்டு வங்கி சிறு அளவாவது சேதாரம் ஆகும் என்பது பாஜகவின் கணக்கு.

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு தொடர்ந்து பேசி வருகிறார்கள். சசிகலாவை வரவேற்க எத்தனை வாகனங்களில் செல்கிறீர்கள் எவ்வளவு கூட்டம் கூட்ட போகிறீர்கள் என்னென்ன வேறுபாடுகள் செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்கள் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

“இதுவரைக்கும் உளவுத்துறை அதிகாரிகள் எங்களை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. ஆனால், இப்போது மூன்று நாட்களாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் எடப்பாடியின் டெல்லி பயணத்திற்கும் சசிகலாவின் விடுதலைக்குப் பிறகான அரசியலுக்கும் டெல்லி மூலமாக தொடர்பு ஏற்படுத்தப்படுகிறதோ என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

-வணங்காமுடி

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share