ஸ்டாலினை கிண்டலடிக்கும் எடப்பாடி: பின்னணி என்ன?

Published On:

| By Balaji

தமிழக முதல்வர் எடப்பாடி சில நாட்களாக அளித்து வரும் பேட்டிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேல் தாக்குதல்களையும், கிண்டல்களையும் எளிதாக நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரில் சிஏஏ சட்டத்தால் இதுவரை யாருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று ஆவேசமாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி… இதேபோன்ற ஆவேசங்களையும் கிண்டல்களையும் பிரஸ் மீட்டுகளிலும் வெளிப்படுத்துகிறார்.

பிப்ரவரி 24 ஆம் தேதி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, சுபஸ்ரீ மரணம், பொள்ளாச்சி சம்பவம் ஆகியவற்றை மறைக்கவே மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா பிறந்தநாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது ஒவ்வொரு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அதுபோலவே இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றே கால் ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும். அடுத்தும் அம்மாவின் ஆட்சிதான் தொடரும். ஸ்டாலின் என்ன ஆட்சிக்கா வரப்போகிறார்” என்று சிரித்தபடியே பதில் கூறியவர், ஸ்டாலின் எப்போதும் முதல்வர் கனவில் இருப்பதாகவும் சாடினார்.

பின் 26 ஆம் தேதி தஞ்சையில் வைத்திலிங்கம் இல்ல திருமணத்தில் பேசியவர், “ஸ்டாலின் நமது ஆட்சிக்கு நன்றாக விளம்பரம் தேடித் தருகிறார்” என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் மீதான எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறைகள் ரொம்பவே மாறி வருவது பற்றி அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல் சுவாரஸ்யமாக இருக்கிறது.

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரப் போகிற சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டார். அமைச்சர்களை, மாவட்டச் செயலாளர்களை கலந்து ஆலோசிப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தனக்கு நம்பகமான ஜோதிடர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட ஜெயலலிதா போலவே ஜோதிடர்களை நம்புபவர் எடப்பாடி பழனிசாமி. அண்மையில் அவரது ஜாதகத்தை ஆய்வு செய்த ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், ‘வர்ற தேர்தலில் நீங்கதான் ஆட்சியைப் பிடிப்பீங்க. ராஜயோகம் உங்களுக்கு இருக்கு’என்று கூறியதோடு, கூடுதலாக ‘திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆட்சியில் அமரும் பாக்கியம் அவரது ஜாதக அமைப்புப்படி இல்லை’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் கூடுதல் தெம்பாகிவிட்டார் எடப்பாடி. தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘நான் எம்.எல்.ஏ.வா இருந்தப்ப அமைச்சர் ஆவேன்னு ஜோதிடர்கள் சொன்னாங்க.நான் நம்பலை. ஆனா அமைச்சராகிட்டேன். அம்மா காலமான பிறகு நான் முதல்வராக வாய்ப்பிருப்பதா ஜோதிடர்கள் சொன்னாங்க, அப்பவும் நான் நம்பலை. ஆனா சில மாதங்கள் கழிச்சி முதல்வர் ஆகிவிட்டேன். இப்ப மீண்டும் நான் முதல்வர் ஆவேன்னு ஜோதிடர்கள் சொல்றாங்க’ என்று சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.

தேர்தலை எதிர்கொள்ள தேவையான பணம் இருக்கிறது, கூட்டணி பலமும் இருக்கிறது. இதையெல்லாம் விட தன்னையும் ஸ்டாலினையும் பற்றி ஜோதிடர்கள் கூறியதுதான் எடப்பாடிக்கு பெரும் பலமாக இருக்கிறது” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share