திமுக சார்பில் ஏற்கனவே பிரச்சாரத் தொடர் கூட்டத்தை கனிமொழி எம்.பி எடப்பாடியில் இருந்து தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாக இப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபைக் கூட்டத்தை முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்த வேளையில், ஜனவரி 18ஆம் தேதி மாலை எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார் ஸ்டாலின். இதில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் கூட்டம் ஸ்டாலினை உற்சாகமாக்கியது.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து ஸ்டாலின் பேசும்போது, “இதுவரை நான் கலந்துகொண்ட கிராம சபைக் கூட்டங்களிலேயே அதிக அளவு மக்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் ஒன்றாக இந்த எடப்பாடி தொகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் அமைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது மறைவின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் பணிகளும் நடைபெறவில்லை. இந்த லட்சணத்தில் இந்த எடப்பாடி தொகுதி என்பது முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்த தொகுதி. நீங்கள் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கவில்லை; சட்டமன்ற உறுப்பினராகத்தான் தேர்ந்தெடுத்தீர்கள்.
எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப் போவதாக அவர் கூறினார். ஆனால், அது நடக்கவில்லை. தமிழ்நாட்டில் வேலை கொடுக்காதது பற்றி வேண்டாம்; இந்த எடப்பாடி தொகுதியில் யாருக்காவது இந்த அ.தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
இதோ இந்த மேஜையில் அடுக்கி வைத்திருப்பதைப் பாருங்கள். இது என்ன தெரியுமா? வேலை வேண்டும் என்று கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த எடப்பாடி தொகுதியிலிருந்து மட்டும் படித்த பட்டதாரி இளைஞர்கள் 9,600 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்த அந்த நகல்தான் இது. ஆதாரத்தோடு இங்கே வைத்திருக்கிறோம். இதில் ஒருவருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? இல்லை.
இந்தத் தொகுதிக்கு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் 234 தொகுதிகளுக்கும் அவர் எப்படி செய்ய முடியும்? எனவே அப்படிப்பட்ட இந்த ஆட்சியை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்” என்று ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார்.
கிராம சபையில் சிலர் பேசியதும் மீண்டும் ஸ்டாலின் பேசினார்.
“இங்கே பேசியவர்கள் வேலைவாய்ப்பு பிரச்சினை, மருத்துவமனை பிரச்சினை, விசைத்தறி நெசவாளர்கள் பிரச்சினை, தண்ணீர் மற்றும் மணல் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். இவை அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு இதையெல்லாம் செய்ய எங்கே நேரம் இருக்கிறது?
தி.மு.க ஆட்சி இருந்தபோது சிலிண்டர் 250 ரூபாயாக இருந்தது. இப்போது 750 ரூபாயாக உள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ 38 ரூபாயாக இருந்தது. இப்போது 92 ரூபாயாக உள்ளது. உளுத்தம் பருப்பு தி.மு.க ஆட்சி இருந்தபோது ஒரு கிலோ ரூபாய் 60. இப்போது ரூபாய் 150 இந்த லட்சணத்தில் அரசினுடைய குறைபாடுகளை, இலஞ்ச ஊழல்களை நாம் எடுத்துச் சொன்னால் இந்த ஊர் எம்.எல்.ஏ.வான முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது..
எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரடியாக முதலமைச்சர் ஆகவில்லை. நீங்களெல்லாம் அவர் முதலமைச்சர் ஆவார் என்று நினைத்து வாக்களித்தீர்களா? அவர் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் வாக்களித்தீர்கள். அதன் மூலமாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அதைத் தான் நாம் சொல்கிறோம். எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றுகூடிக் கலந்துபேசி தேர்ந்தெடுத்தார்களா? இல்லை. காலில் ஊர்ந்து சென்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தவுடன், சசிகலா அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். சசிகலா சிறைக்குச் சென்று விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தார்? ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். அப்போது அம்மா அவர்களது மரணம் மர்மமாக இருக்கிறது. இதை நான் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன். இதற்கு நீதி விசாரணை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னார். உடனே அவரை அழைத்துச் சரி செய்து, நீதி விசாரணை வைக்கிறோம், நீங்கள் துணை முதல்வராக வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று உட்கார வைத்தார்கள். நீதி விசாரணை வைத்தார்கள். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கமிஷன் அமைத்து 3 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரைக்கும் யார் குற்றம் செய்திருக்கிறார்? எப்படி இருந்தார்? என்ன சூழ்நிலையில் இருந்தார்? என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டது? அது உண்மையான மரணமா? மர்மமான மரணமா? ஏதாவது விசாரணை வந்ததா? இல்லை.
இதைப்பற்றி எடப்பாடி பழனிசாமிக்குக் கவலை இல்லை. அவரது கவலை எல்லாம் யார் சாலை ஒப்பந்தம் எடுக்கிறார்கள்? ஒப்பந்தக்காரர்களிடம் எப்படி கமிஷன் வாங்கலாம்? 9,600 பேர் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை.
இவரது ஆட்டமெல்லாம் தேர்தல் வரும்போது முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே சசிகலா விடுதலையாகி வந்தவுடன், இவரது பதவிக்கு ஆட்டம் வரப் போகிறதா, இல்லையா என்று பாருங்கள்” என்றார் ஸ்டாலின்.
**-வேந்தன்**
�,