சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்குத் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தியாவை கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் அலையின் போது, மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பிற்குத் தேர்வு நடத்தாமல், ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை மாணவர்கள் கொண்டாடித் தள்ளினர். சமூக வலைதளங்களில் அவருக்கு மாணவர்களின் வாழ்த்துக்களும் ஆதரவும் அதிகரித்தது.
இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை எதிரொலியாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். மாணவர்களின் உடல்நலனில் எந்த சமரசமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கம் மூலம் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம் மாணவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது. மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பெற்றோர்களின் அச்சமும் நீங்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்
**-பிரியா**
�,