நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு செய்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
ராகுல்காந்தியை ஜூன் 2 ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவர் வெளிநாட்டிலிருந்ததால் ஆஜராவதிலிருந்து அவகாசம் கோரியிருந்தார். இதை ஏற்று ஜூன் 13ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.
நாளை ராகுல் காந்தி அமலாக்கத் துறையில் ஆஜராக உள்ள நிலையில் நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக, 13.6.2022 அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தியும் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில் வரும் ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்காகக் காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜக அரசின் மலிவான அரசியல் தான் இது என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
**-பிரியா**