கடந்த இரண்டு நாள்களாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மக்கள்நலன் சார்ந்து வாதப் பிரதிவாதம் தொடர்ந்து வருகிறது. ஆளும் கட்சியானது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சியான அதிமுகவின் குற்றச்சாட்டு. இதில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் இப்போது வறுபட்டுக்கொண்டு இருக்கிறது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, நேற்று தேனியில் ஊடகத்தினரிடம் பேசியபோது, கடந்த ஆட்சியில் மோசடியாக கூட்டுறவுக் கடன்களைப் பெற்றுள்ளனர் என்று பல புள்ளி விவரங்களைத் தெரிவித்தார்.
அதையொட்டியும் அதிமுக தரப்பு இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியது. அதிமுக இணையதள அணியினர் சமூக ஊடகங்களில் திமுக அரசாங்கத்தின் மீது குறைகூறி கருத்துகளை வெளியிட்டனர்.
இந்த நிலையில், இதைப் பற்றி துறையின் அமைச்சர் இ. பெரியசாமி காலை 10.30 மணிக்கு தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக செய்தித்துறை சார்பில் காலை 8 மணிக்கே ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் இன்று காலையில் சூடான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அறிவிக்கப்பட்டபடி, காலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரும் தெரிவித்த தகவல்களைக் குறிப்பிட்டு விளக்கம் அளித்தார்.
அப்போது, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் குறுக்குவழியில் நகைக்கடன் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 2 இலட்சம் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கொடுக்கலாமா? இதை யார் வாங்கியிருக்கிறார்கள், தெரியுமா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்கிற நகை அடகுக்கடைக்காரர் 672 நகைக்கடன் வாங்கியிருக்கிறார். எல்லாமே 5 பவுனுக்கும் கீழ்.. இதைக் கொடுத்துவிடலாமா? அரசின் மக்களின் வரிப்பணத்தை அபகரிப்பது அல்லவா, இது? இதை தரலாம் என்கிறாரா ஓ.பன்னீர்?
இதேமாதிரி, நகையே இல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூரில் 223 பொட்டலங்களுக்கும் மேலாக 2 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கவரிங் நகைகளை வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள்.
பல்வேறு வகைகளில் கூட்டுறவுக் கடன் தள்ளுபடியைப் பெறவேண்டும் என்பதற்காக ஆதாயத்தைப் பெற உள்நோக்கத்தோடு செய்ததை எப்படி தள்ளுபடி செய்யமுடியும்?
மொத்தம் 48 இலட்சம் நகைக்கடன்களை ஆய்வுசெய்ததில், 5 பவுனுக்கு மேல் உள்ள 35 இலட்சம் பேர் வருகிறார்கள். 13 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி அளித்திருக்கிறோம்.
இதில், முழுவதும் பார்த்தால், ஒரு குடும்பத்துக்கு 10 பேர் இருக்கலாம், 5 பேர் இருக்கலாம், எப்படி தள்ளுபடி தரமுடியும்? இதை ஆய்வுசெய்து, 40 கிராமுக்குக் குறைவாக உள்ளவற்றைத் தள்ளுபடி செய்திருக்கிறோம்.
வயிற்றெரிச்சலில் அவர்கள் புரியாமல் பேசுகிறார்கள்.
ஒரு பைசாகூட மக்களின் பணத்தை வீணாக்காமல் மக்களிடம் சென்றுசேர்க்க வேண்டும். இந்தக் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 22 இலட்சம் பேர். 48 இலட்சம் பேர் அல்ல, நகைக்கடன்கள். இதில் 10 இலட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தள்ளுபடி பயனாளிகள். பாதி பேர் பயனடைகிறார்கள். இதில் எந்தவிதத் தவறும் இல்லை.
நிபந்தனையைச் சொன்னீர்களா என ஓ.பன்னீர் கேட்கிறார். ஒரே வீட்டில் 10 பேர் 100 கடன் வாங்கியிருந்தால், அதைத் தரவேண்டுமா?
இலட்சக்கணக்கான கடன்கள், இப்படி பல கடன்களை வாங்கியிருக்கிறார்கள். ஒரே ஆதார் அட்டையில் நூற்றுக்கணக்கான கடன்களை வாங்கியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் தரவில்லை.
நிச்சயம் நம்ம கட்சி ஆட்சிக்கு வராது என செய்திருக்கிறார்கள். அப்போது யார் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழுவில் இருந்தது?. தருமபுரி, சேலம் என முறைகேடுகளை ஆதாரமாகத் தருகிறோம். “ என்று அமைச்சர் பெரியசாமி விவரித்தார்.
**-முருகு**
�,