ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி விவாதித்தன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்வுக்கு இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு முறையான கட்டமைப்பை ஏற்படுத்தாததே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுபோலதான் பாஜகவும் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியிருந்தார்.
ஊரடங்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் நாள்தோறும் உரையாற்றிவரும் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், இன்று (மே 24) மாயாவதியின் கருத்து தொடர்பாக பேசினார்.
”மக்கள் வலிமையும், வாக்கு வலிமையும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமாக உள்ளன. இந்த மாநிலங்களிலுள்ள வறுமையும், அதன் விளைவாக புலம்பெயர் தொழிலாளர்களாக இடம்பெயர்வதும் எவ்வளவு பெரிய அவலம். இத்தனைக்கும் வற்றாத ஜீவநதியான கங்கை பாயும் சமவெளி அங்குதான் இருக்கிறது” என்று கூறிய ஜெயரஞ்சன், அப்பகுதி மக்கள் முன்னேற முடியாததற்கு இருக்கும் தடை குறித்தும் விவரிக்கிறார்.
“வடக்கிலிருந்து புலம்பெயர்பவர்கள் பெரும்பாலும் தெற்கு அல்லது மேற்கு மாநிலங்களுக்கே தொழிலாளர்களாக செல்கின்றனர். மேற்கு மாநிலங்கள் வசதி படைத்தவை என்ற சாதகமான நிலை இருந்தது. சமுதாய இயக்கங்கள் மூலம் ஏற்பட்ட மாற்றத்தால் தென் மாநிலங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“தமிழகத்தில் இத்தனை பேர் படித்து உயர் பதவிகளில் இருக்கிறார்கள். வளர்ச்சி குறைந்தவை என்று வட மாநிலங்களுக்கு நிதி அதிகமாக வழங்கினாலும் அங்கு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. அடித்தளத்தில் மக்களை அதற்கு தயார்ப்படுத்தாததால் வட மாநிலங்களில் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை. நிலப்பிரப்புத்துவம் அங்கு கடுமையான பிடியில் உள்ளது. சமூக மாற்றம் காரணமாக தமிழகத்தினர் வளர்ந்துகொண்டே செல்கிறார்கள். வடமாநிலத்தில் உள்ளவர்கள் பழைய நிலையிலேயே உள்ளனர்” என்றும் பேசினார்.
சமூக மாற்றத்தின் முக்கியத்துவம், அதனால் ஏற்பட்ட நலன்கள் அனைத்தையும் நாம் உணர வேண்டும். இதைவிட்டுவிட்டு வாட்ஸ் ஆப் செய்தி மற்றும் பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு சமூக மாற்றத்திற்கு வித்திட்ட இயக்கங்களையும், சாதனைகளையும் தொலைப்பது அனாதையாக பரிதவிப்பதற்கு சமம். சமூக இயக்கங்களை அப்புறப்படுத்துவதற்கு பெருமுயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு பலியானால் நமது மாநிலமும் உத்தர பிரதேசம், பீகார் ஆகிவிடும். ஆகவே, இதுபற்றிய புரிதல் நமக்குத் தேவை என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.
அவர் பேசிய முழு காணொலியையும் கீழே உள்ள லிங்கில் காணலாம்.
**எழில்**�,”