மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன்படி இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இந்த அறிக்கையில், 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 8-8.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2021-22 நிதியாண்டில் வளர்ச்சி 9.2 சதவீதம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பின் படி அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்.
எனினும் பொருளாதார வளர்ச்சி, கொரோனா பேரிடர் காலத்துக்கு முந்தைய அளவை நோக்கி உயர்வதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
பண வீக்கம் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயரும் நிலையில், இறக்குமதியால் இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்படும். எனவே பணவீக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
2021-22ஆம் ஆண்டில் விவசாயம் சார்ந்த துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும். இதுவே 2020-21ல் இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது. அதுபோன்று 2022 ஆம் நிதியாண்டில் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமாக இருக்கும். சேவைத் துறை 2021-22ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
**-பிரியா**
�,