நிதி நெருக்கடி: மருத்துவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறதா?

Published On:

| By Balaji

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்களுக்கு முறையே 8, 15, 17, 20 ஆவது ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்ட 23.10.2009-ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தங்களுக்கும் அதே போன்று பதவி உயர்வு வழங்கப் பட வேண்டும்; அதன் அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்டப் போராட்டம் நடத்தினர். அவ்வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவர்களுக்கு பின்தேதியிட்டு பதவி உயர்வு வழங்க சுகாதாரத்துறை ஆணையிட்டது. அதனடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி தமிழக நிதித்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ஆணையிட்டது.

அதன்படி, 2009ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசின் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசாணை திருத்தப்படும் போது, 2009-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கணிசமாகக் குறையும். அது மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்துத் துறைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், தமிழக அரசின் வருமானம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது? அரசின் நிதிநிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது? என்பதை அறிவேன். ஓய்வூதியக் குறைப்புத் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடியை மிச்சப்படுத்தலாம் என்று அரசு நினைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளவர்,

“ஆனால், அரசின் கணக்கு தவறாகும். 2018-ஆம் ஆண்டில் ஓய்வூதிய அதிகரிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, அதனால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 1640 பேர் மட்டுமே. அவர்கள் அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், மாதத்திற்கு மாதம் அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், அவர்களின் ஓய்வூதியத்தைக் குறைப்பதால் மாதத்திற்கு ரூ. 2 கோடி கூட கிடைக்காது. அதை வைத்துக் கொண்டு அரசின் நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, “நிதிநெருக்கடியை சமாளிப்பதற்காக ஓய்வூதியக் குறைப்பாக இருந்தாலும், ஊதியக் குறைப்பாக இருந்தாலும் அது அனைத்து துறை பணியாளர்களுக்கும் ஒன்றாகத் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு தரப்பினருக்கு மட்டும் ஓய்வூதியக் குறைப்பு செய்வது பாகுபாடானது ஆகும். அரசு அதன் பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவது ஏற்கவே முடியாததாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “மருத்துவர்களின் பணி கடவுளுக்கு இணையானது என்பதை கொரோனா நோயை ஒழிக்க அவர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதிலிருந்தே அறிந்திருப்போம். அவர்களின் சேவைகளை போற்ற வேண்டிய அரசு, அவர்களின் ஓய்வூதியத்தை குறைப்பது அழகல்ல. இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வூதியம் என்பது சலுகையல்ல… உரிமை. எனவே, மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். 70, 80 வயதைக் கடந்த மருத்துவர்கள் மன உளைச்சலின்றி நிம்மதியாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்றும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share