வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது போல குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ-வையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குரல் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (நவம்பர் 29) தொடங்குவதை ஒட்டி, நேற்று டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கட்சி கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய மேகாலயா எம்.பி-யும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சித் தலைவருமான அகதா சங்மா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.
“விவசாயிகளின் கோரிக்கைகளையும் சென்டிமென்ட்டையும் வைத்து வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது போல வடகிழக்கு மக்களின் அதே வகையான உணர்வுகளை மனதில் கொண்டு சிஏஏ சட்டத்தையும் ரத்து செய்யுமாறு நான் இந்தக் கூட்டத்தில் அரசாங்கத் தரப்பிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. என் கோரிக்கையை கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் அகதா சங்மா.
“இந்தக் கோரிக்கையை எனது கட்சி சார்பாகவும் வடகிழக்கு மக்களின் சார்பாகவும் முன்வைத்தேன்” என்றும் அவர் கூறினார். மேகாலயாவின் ஆளுங்கட்சி, அகதா சங்மா தலைமையிலான கட்சிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் வடகிழக்கு மாநிலமான திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்டு, நேற்று உரையாற்றியுள்ள அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, “திரிபுரா மாநிலத்தில் அகர்தலா மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஸ்வீப் செய்துள்ளது. இதற்காக பாஜகவினரை நான் பாராட்டுகிறேன். நமது ஆபரேஷன் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் தொடரும்” என்று கூறியுள்ளார்.
**-வேந்தன்**
.
�,