குமரியில் மீனவர்களுடன் கலந்துரையாட ராகுலுக்குத் தடை!

Published On:

| By Balaji

கன்னியாகுமரியில் மீனவர்களுடன் நடக்கவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும், ராகுல்காந்தி மேற்கொள்ளவிருந்த படகு சவாரிக்கும் அம்மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தேங்காய்பட்டினத்தில், பரக்கணி தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பதாக, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்திரத்தன்மை சான்றிதழ் இல்லை எனக் கூறி நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து, கன்னியாகுமரி மேற்கு கடலோர மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். தங்களது கஷ்டங்களை ராகுல் காந்தியிடம் கூறுவதற்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஏதோ காரணம் கூறி இதையும் தடை செய்து விட்டார்கள் என்று மீனவர்கள் குற்றம்சாட்டினர். மீனவர்கள் கடலுக்குள் இருந்தபடியே மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுல்காந்தி காளியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்ற ராகுல் காந்தி கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம் செய்து வலை வீசி மீன் பிடித்தார். அப்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி கடலில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share