ஒமிக்ரான்: இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஒத்திவைப்பு!

politics

ஒமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக இந்திய-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி,தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு,அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் வருகின்ற டிசம்பர்17ஆம் தேதியிலிருந்து விளையாட இருந்தது. இதற்காக இந்திய அணி வருகின்ற டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது.

இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அதன் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் இன்று(டிசம்பர் 4) காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிவிப்பில்,”கொரோனா அச்சம் காரணமாக இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தற்காலிக ஒத்திவைப்பு, நிலைமை சரியான பின் மீண்டும் தொடர் தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் காரணமாக பல்வேறு நாடுகளில் அதிகளவிலான மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

**தடுப்பூசியே ஒமிக்ரானை தடுக்கும்**

சென்னை தேனாம்பேட்டையில் இன்று(டிசம்பர் 4) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ”ஹை ரிஸ்க் என்று பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து 20 விமானங்களும், மற்ற நாடுகளிலிருந்து 85 விமானங்களும் வந்துள்ளன. ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்த 3145 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது என்பது உங்களுக்கே தெரியும்.

நேற்று நானும், துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்தோம். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், சென்னை மற்றும் திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமாக இருக்கின்றனர். முதற்கட்ட ஆய்வின்படி இவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபோன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதான பெண்ணுக்கு மீண்டும் சோதனை நடத்தியதில், நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இது சந்தோஷமான செய்தி. அதனால் மக்கள் மிகவும் விழிப்புடன் இருந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒமிக்ரானில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். அதனால் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

**ஓபிஎஸ் கோரிக்கை**

ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு வரும் முன் காப்பதே சிறந்தது என்பதற்கு ஏற்ப ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்றுமாறு, தகுந்த அறிவுரைகளை வழங்கி, அவை பின்பற்றப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்கள் அதைச் செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதிலும், அண்டை மாநிலங்களின் எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்குவதிலும், எந்தவித சுணக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில்,ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என இந்திய கொரோனா மரபணு பகுப்பாய்வுக் கூட்டமைப்பு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *