�டிஜிட்டல் திண்ணை: பொள்ளாச்சியை அடுத்து விஜயபாஸ்கர்? அதிமுக மீது பாயும் பாஜக!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்த தொடர்ச்சியான நிகழ்வுகளை மின்னம்பலத்தில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வருகிறோம்.

அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு ஜனவரி 7 ஆம் தேதியோடு மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால் பாஜகவோ இன்னமும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாய் டிசம்பர் 29 ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்த அதிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடியையும், பன்னீரையும் வைத்துக்கொண்டே பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, ‘எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் முதல்வர் வேட்பாளர். அவரை ஏற்பவர்களோடு எங்கள் தலைமையில்தான் கூட்டணி’ என்று பாஜகவுக்கு பதில் கொடுத்தார். இதையடுத்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு இடத்தில் கூட மோடி என்றோ, மத்திய அரசு என்றோ, பாஜக கூட்டணி குறித்தோ தன் பேச்சுகளில் மிக கவனமாக குறிப்பிடாமல் தவிர்த்து வருகிறார்.

ஜனவரி 4 ஆம் தேதி நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பி.ஹெச்.பாண்டியன் சிலை திறப்பு விழாவுக்காக ஒரே ஜீப்பில் வந்த ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அந்த விழா முடிந்த பின் அம்பாசமுத்திரத்தில் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. முருகையா பாண்டியனை சந்தித்தனர். அப்போது அங்கே அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உதயகுமார், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இருக்கையிலும், ‘பாஜகவோடு கூட்டணி வேண்டாம். இதை அவர்களிடம் சொல்லிவிடுங்கள்’ என்று நிர்வாகிகள் ஒருமித்த குரலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடமும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்த பாதையில் பாஜக எதிர்ப்பு பேச்சுகள் வலுவாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்தான்… நீண்ட நாட்களாக பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த சிபிஐ இப்போதுஅதிமுக மாணவரணி நகரச் செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான அரசு அம்மா அரசு என்றும் பெண்கள் ஓட்டைக் குறிவைத்து எடப்பாடி முழு வீச்சில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில், அதுவும் எடப்பாடி ஈரோட்டில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் பொள்ளாச்சியில் அதிமுக நகர செயலாளரை கைது செய்திருக்கிறது சிபிஐ. உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது அதிமுக. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து இரு வருடங்கள் ஆன நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகள் எத்தனையோ முறை வலியுறுத்தியும், பல பத்திரிகைகள் இந்த விவகாரம் பற்றி அம்பலப்படுத்தியும், திமுக மகளிரணிச் செயலாளர் பொள்ளாச்சியில் சென்று தடைகளை மீறி இந்த விவகாரத்தில் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்தியும் சிபிஐ அசைந்துகொடுக்கவில்லை.

இந்நிலையில் கனிமொழி இந்தக் கைதுபற்றி, ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா?’என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கைது நடவடிக்கையை அதிமுகவுக்கு எதிரான மிகப்பெரிய தேர்தல் ஆயுதமாக கொங்கு பகுதியில் திமுக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ மிக தாமதமாக செயல்பட்டிருந்தாலும் இந்த செயல்பாட்டுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று அதிமுக கருதுகிறது. அதிமுக டாப் லெவல் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘பாஜகவுடன் கூட்டணி விஷயத்திலும் சீட்டுகள் விஷயத்திலும் அதிமுக வேறுமாதிரி நிலைப்பாடுகளை எடுத்து வருவதால்தான் முதல் கட்டமாக பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ செயல்பட்டிருக்கிறது. அதிமுகவின் இந்தப் போக்கு தொடரும் பட்சத்தில் அடுத்ததாக அமைச்சர்கள் மீது கை வைக்க முடிவு செய்திருக்கிறது பாஜக. முதல்கட்டமாக குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். பொங்கலுக்கு முன்போ பின்போ விஜயபாஸ்கருக்கு இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்படலாம் இதுபற்றி எடப்பாடி இப்போது ஆலோசனை செய்து வருகிறார்’ என்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால்தான் அதிமுக அரசின் மீதான பல்வேறு புகார்கள், வழக்குகள் மீது அமைதி காத்து வந்தது பிஜேபி. இப்போது அமித் ஷா அதற்கான சிக்னலை தந்துவிட்டதாகவே தெரிகிறது. இனி அதிமுக-பாஜக இடையே பரபரப்புச் சம்பவங்கள் பல அரங்கேறலாம் என்று பாஜக வட்டாரத்திலும் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share