kஇ-பாஸ் நடைமுறை தொடருமா? தமிழக அரசு பதில்!

Published On:

| By Balaji

இ-பாஸ் நடைமுறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வேலையின்றி, உணவின்றி தவிக்கும் மக்களுக்கு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சேசுபாலன் என்பவர் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.

அதில், “உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்தும், அவர்களுக்கு இ–பாஸ் வழங்கப்படவில்லை. நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்களுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று (ஆகஸ்ட் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் “இ பாஸ் நடைமுறையை தொடர்வதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் முடிவெடுக்கப்பட்டு இ-பாஸ் குறித்து அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அரசின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என மனுதாரருக்கு அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இ-பாஸ் நடைமுறை தொடர்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில், இ-பாஸ் நடைமுறைத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share