இ-பாஸ் கட்டாயம் தேவைப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளுக்கான திட்டக் கல்வெட்டைத் திறந்துவைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தமாக ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும். இ-பாஸ் நடைமுறையில் இருந்தால்தான் யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். அதன்மூலம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். ஆகவே, இ-பாஸ் நடைமுறையில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவையில்லாமல் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்” என்று தெரிவித்தார்.
அரியர் வைத்தவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு குறித்து பேசிய முதல்வர், “கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என யாருக்கும் தெரியவில்லை. மாணவர்கள் எப்போது தேர்வு வரும் என்று பயத்துடன் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் மன உளைச்சலை போக்கும் விதமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
மேலும், “நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டுமென ஜூன் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். தற்போது, சுகாதாரத் துறை அமைச்சரும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்” என்று நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டையும் விளக்கினார்.
**எழில்**�,