mஇ-பாஸ் நடைமுறை ரத்தா? கைவிரித்த முதல்வர்!

politics

இ-பாஸ் முறை ரத்துசெய்யப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. 4 மாதங்கள் கடந்த நிலையில் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (ஆகஸ்ட் 7) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம், இ-பாஸ் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இ-பாஸ் நடைமுறையை இப்போதைக்கு ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் எப்படி பரவிக்கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியபோது, வைரஸ் பாதிப்பு அதிகமானதால் அதனை ரத்து செய்தோம்.

தற்போது பாதிப்பு படிப்படியாக குறைகிறது. குறைந்ததும் பொது போக்குவரத்தை இயக்குவது குறித்து அறிவிக்கப்படும். மற்றபடி இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க மாவட்ட ரீதியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பணிகளுக்கு செல்பவர்கள் முறையாக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைக்கும்” என்று முதல்வர் பதிலளித்தார்.

மேலும், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும். அதுபோலவே புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கைப்படி முடிவெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *