�மூத்தவர்கள் முதல் முறை எம்.எல்.ஏ. வரை… உருக்க வெள்ளத்தில் மிதக்கவிட்ட துரைமுருகன்

politics

திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடக்கிறது. திமுகவின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தப் பொதுக்குழு கூடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவித்தார். இந்தப் பொதுக்குழுவில் தற்போதைய பொருளாளரும், மூத்த தலைவருமான துரைமுருகன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.

கட்சியின் சட்ட திட்ட விதிகளின்படியும் மரபுப்படியும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவரை கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிவார்கள். அதை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிர்வாகிகள் வழிமொழிவார்கள்.

இந்த வகையில் துரைமுருகன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கும்மிடிப்பூண்டி வேணு, பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்மொழியத் தயாராகி வருகிறார்கள்.

திமுகவில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில்… நேற்று மாலை, மூத்த நிர்வாகிகள் முதல் தன் மனதுக்குப் பிடித்த இளம் நிர்வாகிகள் வரை பலருக்கும் போன் போட்டுப் பேசியிருக்கிறார். பொதுவாகவே துரைமுருகன் பேச்சைக் கேட்டால் கனத்த மனதும் லேசாகிவிடும். அந்த அளவுக்கு கலகலப்பும், நகைச்சுவையும், நக்கலும் நையாண்டியும் தெறிக்கப் பேசுவார் துரைமுருகன்.

ஆனால் நேற்று மாலை அவர் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல… முதல் முறையாக திமுகவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கும் கூட போன் போட்டு, ‘தம்பீ… என்னை முன்மொழியுறவங்க பட்டியல்ல நீங்களும் இருக்கணும். மூத்தவங்கனு என்னை ஒதுக்கிடாதீங்க. தலைவர் கலைஞரோட பழகினதால டெய்லி நானும் அப்டேட் ஆகிட்டுதான் இருக்கேன். அதனால உங்களைப் போன்ற முதல் முறையா எம்.எல்.ஏ. ஆகியிருக்கிற இளைஞர்களும் என்னை முன்மொழியணும். திமுகவுல இருக்குற எல்லா தலைமுறையும் சேர்ந்துதான் என்னைத் தேர்ந்தெடுக்கணும்” என்று சொல்ல… அந்த முதல் முறை எம்.எல்.ஏ. இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டிருக்கிறார்.

“ஐயா…உங்களை முன்மொழியறதுக்கான அனுபவம் எனக்கு இல்லீங்களேய்யா…” என்று கூற, “அதெல்லாம் ஒவ்வொரு நாளும் அனுபவம்தான்யா. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சட்டமன்றத்துல உன் சுறுசுறுப்பைப் பாத்திருக்கேன். அன்னிக்கு ஏலகிரிக்கு வந்து நீ ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தப்ப உனக்குள்ள இருக்கிற திறமைய இன்னும் பக்கத்துல பார்த்தேன். சென்ட்டிமென்ட்டா உன்னைப் போல இளைஞர்களும் என்னை முன்மொழியணும்” என்று கூற அந்த முதல்முறை எம்.எல்.ஏ. நெகிழ்ந்து போய்விட்டார்.

நேற்று மட்டும் இதுபோல மூத்தவர்கள், இளைஞர்கள் என திமுக நிர்வாகிகளுக்கு போன் போட்டு உருக்க வெள்ளத்தில் மிதக்க விட்டிருக்கிறார் துரைமுருகன்.

**-ஆரா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0