சட்டமன்றத்தில் சிறப்பாக பதிலுரை வழங்கியதாக தங்கமணிக்கு துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 12) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் தங்கமணி, “தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் உயர்த்தப்படுத்துகிறது. இந்த ஊதிய உயர்வு அறிவிப்பால் 25,690 பணியாளர்கள் பலன் பெறுவார்கள்.
இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்த ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ரூ. 15.42 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதியதாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
விவாதத்தின் முடிவில் எழுந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “எவ்வித குறிப்புகளையும் பார்க்காமல் மிக அருமையாக பதிலுரை வழங்கினார்” என்று தங்கமணியை பாராட்டினார். மேலும், “10ஆவது முறையாக மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கமணி பதிலுரை வழங்குகிறார். அமைச்சர்கள் தங்களின் துறையை முழுமையாக உள்வாங்கினால் மட்டுமே தெளிவாகவும், எந்த குறிப்புகளும் இல்லாமல் பேச முடியும்” என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.
**எழில்**�,