மேட்டூர் அணை 40-வது முறையாகத் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில்,அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவது, நீர்வரத்து குறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேட்டூர் திம்மம்பட்டியில் நடைபெற்று வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளைப் பார்வையிட்டு அவற்றிலிருந்து உபரி நீரை எம் .காளிப்பட்டிக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
அப்போது சேலம் மாவட்டத்தில் வறண்டு உள்ள ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளை முழுமையான செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் தூர்வாரிவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு ஏரி கூட தூர்வாரப்படவில்லை. பல இடங்களில் ஏரிகளின் கரைகளை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.
மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் ரூ.565.00 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் இன்னும் முழுமையடையாத காரணத்தால் தற்போது 5 குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது. எனவே, இத்திட்டத்திற்கு இன்னும் நிலம் எடுக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. நிலம் எடுக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
பல ஏரிகளில் மதகுகள் சரி இல்லை. அதையெல்லாம் சீர்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்றார்.
அப்போது அவரிடம் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “அணைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு சொல்லலாம். அதனாலேயே அணையைக் கட்டி விட முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையத்திற்குத் திட்ட அறிக்கை ஒன்று வழங்க வேண்டும். திட்ட அறிக்கைக்கு அணையின் கீழ் பகுதியில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் ஒத்துழைப்பு தேவை. அப்போதுதான் நீர்வள ஆணையம் ஒப்புதல் அளிக்கும். எனவே தமிழகம் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே மேகதாது அணை கட்ட முடியும்” என்று கூறினார்.
முல்லை பெரியாறு குறித்து பேசிய அவர், “ முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எம்ஜிஆர் காலத்துலேயே உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. கேரள, கர்நாடகத்தில் தமிழகத்தின் நீராதாரங்களைப் பாதிக்கும் எந்த புதிய அணையும் கட்ட அனுமதிக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,”