மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நேற்று அக்டோபர் 20 ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில்.. . அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியுள்ளார்.
நேற்று அக்டோபர் 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கூடியது.
நேற்று நடந்த கூட்டத்தின் ஒரே அஜெண்டா துரை வைகோவை மதிமுகவில் முக்கிய பதவியில் அமர்த்தலாமா வேண்டாமா என்பது பற்றித்தான்.
கூட்டம் தொடங்கியதும் வழக்கம்போல வைகோ சிறிது நேரம் அறிமுக உரையாற்றினார்.
அப்போது அவர், “மதிமுக தொடங்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் துரை இந்தத் தலைமை அலுவலகத்துக்குள் வந்தது கிடையாது. அவர் அரசியலுக்கு வருவதை நான் முற்றிலும் விரும்பவில்லை. என்னிடம் கேட்ட பல மாவட்ட செயலாளர்களை நான் எச்சரித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் துரையை அழைத்து நான் கூட்டங்கள் போட தேதி கேட்கிறார்கள். இந்த கட்சிக்கு துரை மூலம் புது ரத்தம் பாய்ச்ச முடியும் என்கிறார்கள். எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்சியினர் பலர் இதை ஏற்படுத்தி வருவதால் நான் உங்களிடம் இதுபற்றி விவாதிக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த கூட்டத்தை கூட்டி உள்ளேன்.
இன்று எல்லா மாவட்டச் செயலாளர்களும் பேசலாம்” என்றார்.
கூட்டத்தில் முதல் ஆளாக வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன் பேசினார். கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி துரை வைகோவை அழைத்து வைகோவின் பிறந்தநாள் கூட்டத்தை நடத்தியவர் தான் ஜீவன். அவர் தொடங்கி அனைத்து மாவட்ட செயலாளர்களும் துரை வைகோ கட்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அவர் தலைமைக் கழக பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று உறுதியாக பேசினார்கள்.
மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா பேசுகையில், ” எனக்கு பொது வாழ்க்கையில் முகவரி கொடுத்தவர் தலைவர் வைகோ. அவருக்கு எப்போதும் தோள் கொடுப்பேன். பெரும்பான்மையின் முடிவை நானும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பேசினார்.
மதிய உணவுக்கு முன்னதாக எழுந்த வைகோ,” நீங்கள் எல்லோரும் ஆதரித்துப் பேசுகிறீர்கள். இருந்தாலும் வரலாறு என் மீது பழி போட்டு விடக்கூடாது. அதனால் மதிய உணவுக்குப் பிறகு ஓட்டெடுப்பு வைத்துள்ளேன். ரகசிய ஓட்டெடுப்பு வைத்துள்ளேன். அதில் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இதை கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று எதிர்த்தனர்.
ஆனபோதும் மதிய உணவுக்கு பிறகு வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது. வைகோவும் வாக்களித்தார்.
முடிவில் 104 வாக்குகள் ஆதரவாகவும் 2 வாக்குகள் எதிராகவும் பெற்று… பெரும்பான்மை அடிப்படையில்
மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் துரை வைகோ.
நேற்று நடந்த கூட்டத்துக்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி வரவில்லை. வயது காரணமாக அவர் வரவில்லை என காரணம் சொல்லப்பட்டாலும் திமுகவை எதிர்த்து மதிமுக தொடங்கிய நாளில் இருந்து வைகோவுடன் இருக்கும் துரைசாமி வைகோவின் மகன் கட்சிக்குள் வருவதை ரசிக்க வில்லை என்றும் அதை வைகோவிடமே தெரிவித்து விட்டார் என்றும் மதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள் .
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவைத்தலைவர் வராதது பற்றி கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த வைகோ, ” ஆமா அவர் வரலை. அதனால என்ன பண்றது? அவைத்தலைவர் வரவில்லை என்றால் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு சென்றுவிடுகிறது” என்று பதிலளித்தார்.
இந்த பதிலிலேயே வைகோவின் கோபம் தெரிந்தது.
சீனியர் நிர்வாகிகள் சிலர் துரை வைகோவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவரை ஏற்றிருக்கிறார்கள். எனவே சில நாட்களில் பெரியார் அண்ணா கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு தாயகத்துக்கு வருகிறார் துரை வைகோ. அதன் பிறகே மாவட்ட வாரியாக சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதன் பிறகு தாயகம் மகன் அகம் ஆகும்.
**ஆரா**
�,”