ராஜேஷ் தாஸ் விசாரணையை தாமதப்படுத்துகிறார்: தமிழக அரசு!

Published On:

| By Balaji

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்த முயல்வதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகாரை விசாரிக்கக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாகச் செயல்படுவார்கள் என்பதால் இருவரையும், இக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு மனு கொடுத்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே விசாரணை தொடங்கி விட்டதாகவும் ராஜேஷ் தாஸ் தெரிவித்திருந்தார்.

மேலும், இவ்வழக்கின் சாட்சிகள் பலர் புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் என்பதால் அவரை இடமாற்றம் செய்யக் கோரிய மனுவும் ஏற்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று (அக்டோபர் 22) விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டிஜிபி தரப்பில், விசாகா கமிட்டி விசாரித்த சாட்சிகளுடைய வாக்குமூலத்தின் அறிக்கை தரப்படவில்லை என்றும் பாரபட்சமான விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “இவ்வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சிறப்பு டிஜிபி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதுதவிர விசாகா கமிட்டியில் இடம் பெற்று இருந்த அருண் என்ற அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு எதிரான விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்த முயற்சி செய்து வருகிறார் என்றும் இந்த வழக்கில் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனை விசாரித்த நீதிபதி சரவணன் விசாகா கமிட்டி விசாரணை ஏற்கனவே உள்ளபடி நீடிக்க வேண்டும் என்றும் இவ்வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share