காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. எதிர்வருகின்ற மாநில சட்டமன்ற தேர்தல்கள், நடப்பு அரசியல் விவகாரங்கள், கட்சியின் அமைப்பு தேர்தல்கள் ஆகிய பொருள்களை பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு காத்திருக்கிறார்கள். கொரோனா காலம் இன்னும் முழுதாக முடிவடையவில்லை என்பதால் சோனியாகாந்தி மிக மிக முக்கியமான சந்திப்புகளை தவிர பெரும்பாலான நேரடி சந்திப்புகளை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரசில் இருந்து ஒரு பிரமுகர் சோனியா காந்தியால் அழைக்கப்பட்டு நேற்று (அக்டோபர் 12) டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்திருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸின் தற்போதைய துணை தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிட உயர்மட்ட குழு உறுப்பினருமான டி.என். முருகானந்தம் தான் சோனியா காந்தியால் அழைக்கப்பட்டு டெல்லி சென்றிருக்கிறார். ராஜீவ் காந்தி நினைவிட உயர்மட்டக்குழு உறுப்பினர் என்ற முறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரோடு மிகுந்த நெருக்கம் கொண்டவர் முருகானந்தம். சீரிய இடைவெளியில் இவர்களை அடிக்கடி நேரடியாக சந்திக்கும் அரிதான நபர்களில் முருகானந்தமும் ஒருவர். இந்த நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்கு முன்பு முருகானந்தம் டெல்லிக்கு அழைக்கப்பட்டு சோனியாகாந்தி அவரிடம் தனிப்பட்ட முறையில் விவாதித்தது தமிழ்நாடு காங்கிரசுக்குள் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம்.
“கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற சில மாதங்களில் இருந்தே அவரை மாற்றிவிடுவார்கள் என்று அவருக்கு எதிரான சிலர் கிளப்பிவிட ஆரம்பித்தனர். ஆனால் சில மாதங்களாக கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு மாநில தலைமைகளை மாற்றும் யோசனை தலைமைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. சில வாரங்களாகவே தமிழகத்தில் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜயதாரணி போன்றவர்கள் பெயர்களெல்லாம் அடிபட்டன. தற்போதைய காங்கிரஸ் பொருளாளராக இருக்கும் ரூபி மனோகரன் கூட காங்கிரஸ் தலைவர் ஆவதற்காக டெல்லியில் சில உயர்மட்ட முயற்சிகளை செய்வதாகவும் சத்தியமூர்த்தி பவனில் இருந்து தகவல்கள் கசிந்தன.
ஆனால் வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸில் இளையதலைமுறை, மூத்த தலைமுறை என இரு தரப்பினரையும் அரவணைக்காததால் ஏற்பட்ட கஷ்டங்களை உணந்துவிட்டது தேசியத் தலைமை. அதனால் தமிழ்நாட்டில் இந்த இரண்டு தரப்பினரையும் பேலன்ஸ்டு ஆக அரவணைத்துச் செல்லும், பரபரப்புக்கோ சர்ச்சைக்கோ ஆளாகாத ஒரு தலைவரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேடிவந்தது. இந்த சூழலில் டி.என். முருகானந்தம் சோனியாகாந்தியின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றிருப்பதால் தமிழக தலைவர் மாற்றம் என்ற யூகம் அடர்த்தியாகியுள்ளது.
டி.என். முருகானந்தம் செஞ்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரசின் பொருளாளராக இருந்தவர். ராஜீவ் காந்தி நினைவிட உயர்மட்ட குழு உறுப்பினர் என்ற வகையில் அரசு சலுகைகள் கிடைத்த போதும் அவற்றை மறுத்தவர். தற்போது டி.என். முருகானந்தம் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றம் விரைவில் நடக்க வருகிறதோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன” என்கிறார்கள்.
நாம் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் டிஎன் முருகானந்தத்திடமே தொடர்புகொண்டு பேசினோம். சிறிது சிரித்தவர், “இதென்ன வம்பாப் போச்சு…. ராஜீவ் காந்தி மெமோரியல் தொடர்பாக சில விஷயங்களை டிஸ்கஸ் பண்ண மேடம் என்னை அழைத்துப் பேசினார்கள். மேலும் தமிழ்நாடு அரசியல் பற்றியும் பேசினார்கள்” என்று சிரித்தார்.
இந்த சிரிப்பின் பொருள் என்னவோ!
**-ராகவேந்திரா ஆரா**
�,