tரூ. 17,000 கோடி: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்

Published On:

| By Balaji

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வந்த தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சியிலிருந்து முதன்மை தலைமைப் பொறியாளர் புகழேந்தி நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் அவருக்கு வேண்டாத அதிகாரிகள், ஊழலுக்கு ஒத்துழைக்காத ஐஏஎஸ் மற்றும் இதர அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல. நகராட்சி நிர்வாக ஆணையகரத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது என்று தெளிவான சட்ட விதிகள் உள்ளன. இந்த விதியை மீறி – புகழேந்தியைக் கொண்டு வந்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016ஆம் ஆண்டு புகழேந்தி ஓய்வுபெற்றுவிட்டதாகவும், ஒருவருக்கு அதே பதவியில் பணி நீட்டிப்பு வழங்குவது வழக்கம் எனவும், ஆனால் பணி நீட்டிப்பும் வழங்கி- அவருக்கு உயர் பதவியும் வழங்கிய அதிசயம் புகழேந்திக்காகவே உள்ளாட்சித்துறை அமைச்சரால் அரங்கேற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின்,

“இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்களில் நடைபெற்றுள்ள இந்த ‘டிரான்ஸ்பர்’ ஊழல் கொடிகட்டிப் பறக்க, தனக்குத் தானே பாதுகாப்புக் கவசம் அமைத்துக் கொள்ளும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் உள் நோக்கச் செயல்பாடே காரணம் எனத் தெரிகிறது. அது இன்னும் 11 மாதங்கள்தான் என்பது வேறு விஷயம். அதன்பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித் துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு வேலுமணி சட்டத்தின் முன் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சென்னை மாநகராட்சியிலும், தற்போது நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழும் நடைபெறும் / நடைபெற்றுள்ள ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 17000 கோடி ரூபாய்த் திட்டங்களில் பல திட்டங்கள், மத்திய அரசு தரும் நிதியுதவியின்கீழ் நடைபெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் திரும்பத் திரும்ப பணி நீட்டிப்பு வழங்கி ஒரு தலைமைப் பொறியாளரை- குறிப்பாக புகழேந்தியையே நியமித்துக் கொண்டிருப்பதன் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின்,

“எந்த விசாரணைக்கும் தயார் என்று அடிக்கடி பேட்டியளித்து வரும் முதலமைச்சர் பழனிசாமி- இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் குறித்தும்- நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? ஒருவேளை விசாரணைக்கு உத்தரவிடத் தயங்கினால்- இத்திட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவி இருப்பதால்- பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரியை வைத்து இந்த முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share