தமிழ் உள்ளிட்ட மொழிகளை விட சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் பதிலளித்துள்ளார். அதில், “சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சமஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழிகளுக்கு செலவிட்ட தொகையைவிட பல மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. ” என்று கண்டனம் தெரிவித்தார்.
சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும் தான் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், “பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா?” என்று கேட்டுள்ளார்.
தமிழ் மொழியை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள் என்ற கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். கடந்த 3 ஆண்டுகளில் தமிழுக்காக வெறும் ரூ. 22.94 கோடி மட்டுமே, ஏனோ தானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டும் ஸ்டாலின், “வெறுமனே விழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழுக்காக நிதி ஒதுக்கீடு வாங்கித் தருவதில் முனைப்புக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தமிழைவிட முக்கியமான காரியங்கள் அவருக்கு ஏராளமாக இருக்கின்றன” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, செம்மொழித் தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
**த.எழிலரசன்**�,